புறா பிடிக்க முயன்றபோதுகிணற்றில் தவறி விழுந்த சிறுவன் சாவு
தேனியில் புறா பிடிக்க முயன்றபோது கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
தேனி சமதர்மபுரத்தை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மகன் கார்த்திக்ராஜா (வயது 13). இவர் தேனியில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை இவர், பழைய அரசு ஆஸ்பத்திரி சாலை பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகில் தனது நண்பருடன் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த கிணற்றில் புறா இருப்பதை பார்த்து அதை பிடிக்க முயன்றதாக கூறப்படுகிறது. அந்த கிணற்றுக்குள் கார்த்திக்ராஜா தவறி விழுந்தார்.
இதைபார்த்த அவருடைய நண்பர் சத்தம் போட்டார். அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்தனர். சுமார் 80 அடி ஆழ கிணற்றில் 30 அடி வரை தண்ணீர் இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேனி தீயணைப்பு படை வீரர்கள் அங்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால், சிறுவனின் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை. அதன்பிறகு கிணற்றில் இருந்த தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. சுமார் 4 மணி நேர போராட்டத்துக்கு பிறகு சிறுவன் உடல் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தேனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.