சேதமடைந்த வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு தொகுப்பு வீடுகள் கிடைப்பது எப்போது?


புதுக்கோட்டை மாவட்டத்தில் ‘கஜா’ புயல் தாக்கி வருகிற 16-ந் தேதியுடன் 4 ஆண்டுகள் நிறைவடைகிறது. எனவே பழுதடைந்த வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு தொகுப்பு வீடுகளை விரைவில் கட்டித்தர வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

புதுக்கோட்டை

கஜா புயல்

வங்கக்கடலில் உருவான 'கஜா' புயல் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் 16-ந் தேதி அதிகாலை தமிழக கடற்கரையை கடக்கும்போது பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 'கஜா' புயல் கோரத்தாண்டவம் ஆடியது. சுழன்றடித்த காற்றில் தென்னை, மா, பலா, தேக்கு, சந்தனம், வேம்பு உள்பட லட்சக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. நெல், வாழை தோட்டங்கள் அழிந்தன.

ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள் சாய்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டன. ஏராளமான குடிசைகள், வீடுகளை புயல் கபளீகரம் செய்தது. விளைவு, பல நாட்களாக குடிதண்ணீர், சாப்பாடு கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்பட்டனர். வாரக்கணக்கில் போக்குவரத்து முடங்கியது.

4 ஆண்டுகள் நிறைவு

புயலில் பாதிப்புகளை நிவர்த்தி செய்ய அரசு தரப்பில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தன்னார்வலர்களும் களத்தில் இறங்கி பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கினர். 'கஜா' புயல் மறக்க முடியாத அளவிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டு சென்றது. 'கஜா' புயல் புதுக்கோட்டை மாவட்டத்தை துவம்சம் செய்து வருகிற 16-ந் தேதியுடன் (புதன்கிழமை) 4 ஆண்டுகள் கடக்க உள்ள நிலையில் அதன் நினைவலைகளில் இருந்து மக்கள் இன்னும் மீள முடியாத துயரத்தில் தான் இருக்கிறார்கள்.

பல மாதங்களை கடந்த பிறகு நிலைமை சீரடைந்தாலும் 'கஜா' புயல் ஏற்படுத்திய வடுக்கள் இன்றளவும் மாறாமல் உள்ளதாக இருக்கின்றன என்று விவசாயிகளும், பொதுமக்களும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இழந்த பசுமையை மீட்டெடுக்க இப்பகுதி இளைஞர்கள் விவசாயிகளோடு இன்றளவும் போராடி வருகிறார்கள்.

கான்கிரீட் வீடுகள்

'கஜா' புயலில் சேதமடைந்த வீடுகள் அனைத்தும் கான்கிரீட் வீடுகளாக கட்டித்தரப்படும் என்று அரசு அறிவித்தது. அதன்படி தற்போது வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த பணிகள் மந்தகதியில் நடைபெறுவதாக பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

வடகாடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் 'கஜா' புயலில் தங்களது வீடுகளை இழந்தனர். ஆனால் இவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தரப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர்கள் பழுதடைந்த வீடுகளில் வசித்து வருகிறார்கள். மேலும், மீண்டும் புயல் தாக்கிவிடுமோ என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலங்களில் தங்களது வீடுகளை பாதுகாக்க தார்பாய் கொண்டு மூடி வைத்தும், கயிறுகளை கொண்டு கட்டிவைப்பது மற்றும் கம்புகளை ஊன்றி முட்டுக்கொடுத்து வருகிறார்கள். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

பழுதடைந்த வீடுகளில் வசிக்கும் மக்கள்

பத்மநாதன்:- 'கஜா' புயலில் சேதமடைந்த வீடுகள் அனைத்தும் கான்கிரீட் வீடுகளாக கட்டித்தரப்படும் என்று அரசு அறிவித்தது. வடகாடு மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் சிலர் தற்போது பழுதடைந்த வீடுகளில் மிகவும் சிரமத்துடன் வசித்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு ஏழை, எளிய மக்களுக்கு தொகுப்பு வீடுகளை விரைவில் கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சகஜநிலைக்கு திரும்பவில்லை

செல்வராசு:- 'கஜா' என்ற பெயரை கேட்டாலே புதுக்கோட்டை மாவட்ட மக்கள் அச்சம் அடைந்து வருகிறார்கள். புயலின் தாக்கத்தில் இருந்து சகஜ நிலைக்கு திரும்ப பல நாட்கள் ஆனதை யாராலும் எளிதில் மறக்க முடியாது. புயலில் பாதிப்புகளை நிவர்த்தி செய்ய அரசு தரப்பில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் புதுக்கோட்டை மாவட்டத்தில் 'கஜா' புயலால் வீடுகள் மற்றும் தோட்டங்களை இழந்தவர்கள் இன்னும் சகஜ நிலைக்கு திரும்பவில்லை. எனவே தமிழக அரசு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தர வேண்டும்.

சேதமடைந்த வீடுகள் கணக்கெடுப்பு

முத்து:- 'கஜா' புயல் ஏற்பட்டு கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் நிறைவு பெற உள்ள நிலையில் அதன் வடுக்கள் இன்னும் மக்கள் மத்தியில் அகலவில்லை. தற்போது பெய்து வரும் பருவமழையால் மீண்டும் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு சேதமடைந்த நிலையில் உள்ள வீடுகளை கணக்கெடுத்து புதிய வீடுகளை கட்டித்தர அரசு முன்வர வேண்டும்.

குடிசைகள் சேதம்

கீரமங்கலம் சிவ.துரைப்பாண்டியன்:- புதுக்கோட்டை மாவட்டத்தில் 'கஜா' புயலில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி கீரமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்கள் தான். இங்குள்ள குடிசைகள் 'கஜா' புயலில் முழுமையாக பாதிக்கப்பட்டு குடியிருக்க வழியில்லாமல் தார்பாய்களை கூரையாக போட்டுக் கொண்டு மக்கள் வசிக்கிறார்கள். மேலும், அந்த தார்பாய்களும் சேதமடைந்துள்ளதால் பொதுமக்கள் மழையில் நனைந்து அவதியடைந்து வருகிறார்கள். எனவே 'கஜா' புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க சம்பந்தப்பட் ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

வீடுகள் கட்டும் பணி மும்முரம்

புதுக்கோட்டையிலும் கஜா புயலின் போது பல வீடுகள் சேதமடைந்தன. இதுமட்டுமில்லாமல் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் வீடுகள் சேதமடைந்தன. வீடுகள் சேதமடைந்தவர்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அப்போது அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் 16 இடங்களில் ரூ.539 கோடியில் 5,676 அடுக்குமாடி வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ''புதுக்கோட்டை பாலன் நகர், போஸ்நகர், சந்தைபேட்டை, ரெங்கம்மாள் சத்திரம், ஆலங்குடி, அரிமளம், பொன்னமராவதி, அன்னவாசல், கீரனூர், அறந்தாங்கி, இலுப்பூர் அருகே எண்ணெய் மற்றும் இடையப்பட்டி, கறம்பக்குடி ஆகிய இடங்களில் அடுக்குமாடி வீடுகள் கட்டும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இதில் கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் வழங்க முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கஜாபுயலில் பாதிக்கப்பட்டவர்கள் வீடு கோரி விண்ணப்பித்திருந்தனர். அந்த விண்ணப்பத்தின் அடிப்படையில் வருவாய்த்துறை மூலம் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்தநிலையில், கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகள் கோரி புதிதாக விண்ணப்பிக்கும் போது அந்த பகுதியில் வீடுகள் கட்டி கொடுக்க திட்டமிடப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பயனாளிகளின் பங்களிப்பு தொகையை முழுவதுமாக பெற்ற பின்னர் தான் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு வீடுகள் கட்டப்படும் என்றார்.


Next Story