சாயர்புரத்தில் பஸ் நிலையம் கட்டுவது எப்போது?- பொதுமக்கள் எதிர்பார்ப்பு


சாயர்புரத்தில் பஸ் நிலையம் கட்டுவது எப்போது?- பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 2 Jan 2023 12:15 AM IST (Updated: 2 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சாயர்புரத்தில் பஸ் நிலையம் கட்டுவது எப்போது? என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தூத்துக்குடி

சாயர்புரத்தில் பஸ் நிலையம் கட்டுவது எப்போது? என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

நிழற்கூடம் இல்லாத பஸ் நிறுத்தம்

தூத்துக்குடி மாவட்டத்தில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நகரங்களில் சாயர்புரமும் ஒன்றாகும். 15 வார்டுகளைக் கொண்ட சாயர்புரம் பேரூராட்சியில் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பழங்காலத்தில் இருந்தே கல்வி நகராகவும் சிறப்புற்று விளங்கும் சாயர்புரத்தில் நூற்றாண்டை கடந்த கல்வி நிறுவனங்களும் உள்ளன. இங்கு கலை அறிவியல் கல்லூரி, என்ஜினீயரிங் கல்லூரி, கல்வியியல் கல்லூரி போன்றவையும், ஏராளமான பள்ளிக்கூடங்களும் உள்ளன.

மேலும் தும்பு தொழிற்சாலை, கால் மிதியடி, பிளாஸ்டிக் பைகள் உற்பத்தி ஆலைகள் போன்றவையும் உள்ளன. இங்கு ஏராளமான வடமாநில தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்றனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் சாயர்புரம் பஜாரில்தான் அனைத்து பஸ்களும் நின்று செல்கின்றன. ஆனால் இங்கு பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்படாததால் பொதுமக்கள் வெயிலிலும், மழையிலும் நின்று பஸ் ஏறி செல்கின்றனர்.

பஸ் நிலையம்

விரிவடைந்து வரும் நகரின் வளர்ச்சிக்கு ஏற்ப சாயர்புரத்தில் பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்ைக விடுத்தனர். இதனை ஏற்று சாயர்புரத்தில் பஸ் நிலையம் கட்டப்படும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

தொடர்ந்து சாயர்புரம் பஜார் அருகில் மெயின் ரோட்டின் ஓரத்தில் பஸ் நிலையம் அமைப்பதற்காக பேரூராட்சிக்கு சொந்தமான சுமார் 50 சென்ட் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த இடத்தில் இருந்த புதர் செடிகளை அகற்றி சுத்தம் செய்து சமதளப்படுத்தினர். எனினும் 4 மாதங்களுக்கு மேலாகியும் பஸ் நிலையம் கட்டும் பணி தொடங்கப்படவில்லை.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவித்த கருத்துகளை பார்ப்போம்.

மாணவர்கள் அவதி

சாயர்புரம் சாரக் தெருவைச் சேர்ந்த கருப்பசாமி:-

சாயர்புரத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் ஏராளமான மாணவ-மாணவிகள் தங்கியிருந்து படித்து வருகின்றனர். இதேபோன்று இப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகளிலும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தங்கியிருந்து வேலை செய்து வருகின்றனர்.

சாயர்புரம் பஜாரில் உள்ள பஸ் நிறுத்தத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்கின்றன. ஆனால் இங்கு பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்படாததால் மாணவர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சாயர்புரம் பஜார் அருகில் பஸ் நிலையம் அமைக்கும் பணிகளை உடனே தொடங்கி நிறைவேற்ற வேண்டும்.

போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு

சிவத்தையாபுரம் சாலமோன் சசிகுமார்:-

சாயர்புரத்தில் பஸ் நிலையம் கட்டப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததும் பெரிதும் மகிழ்ந்தோம். இதற்காக நிலம் தேர்வு செய்யப்பட்டது. ஆனாலும் இன்னும் எந்த பணிகளும் தொடங்கப்படவில்லை.

சாயர்புரம் பஜாரில் பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்லும்போது போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. எனவே பஸ் நிலையம் கட்டப்பட்டு திறக்கப்பட்டால், பஜாரில் போக்குவரத்து நெரிசல் குறையும்.

நந்தகோபாலபுரம் தங்கராஜ்:-

தூத்துக்குடி புதுக்கோட்டையில் இருந்து ஏரல் செல்லும் மெயின் ரோட்டில் அமைந்துள்ள சாயர்புரத்தில் சுற்று வட்டார கிராம மக்கள் பல்வேறு தேவைகளுக்காக வந்து செல்கின்றனர். மேலும் ஏரல், நாசரேத், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஏராளமான மாணவ-மாணவிகள், தொழிலாளர்கள் சாயர்புரத்துக்கு வந்து செல்கின்றனர். சாயர்புரம் பஜார் பஸ் நிறுத்தத்தில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லாததால் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சாயர்புரத்தில் பஸ் நிலையம் கட்டும் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Related Tags :
Next Story