என்ஜினீயரிங் படிப்பு முதலாம் ஆண்டு வகுப்புகள் எப்போது தொடங்கும்? - ஏ.ஐ.சி.டி.இ. தகவல்


என்ஜினீயரிங் படிப்பு முதலாம் ஆண்டு வகுப்புகள் எப்போது தொடங்கும்? - ஏ.ஐ.சி.டி.இ. தகவல்
x

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில்(ஏ.ஐ.சி.டி.இ.) கீழ் அனைத்து என்ஜினீயரிங் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.

சென்னை,

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில்(ஏ.ஐ.சி.டி.இ.) கீழ் அனைத்து என்ஜினீயரிங் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் 2023-24-ம் கல்வியாண்டுக்கான என்ஜினீயரிங் சார்ந்த தொழில்நுட்ப படிப்புகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை தொடர்பான அட்டவணையை ஏ.ஐ.சி.டி.இ. வெளியிட்டு இருக்கிறது. அதன்படி, தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் ஏ.ஐ.சி.டி.இ.யிடம் அனுமதி பெற வருகிற ஜூன் மாதம் 10-ந்தேதி கடைசி நாள் ஆகும்.

அதேபோல், பல்கலைக்கழகங்கள் மற்றும் வாரியங்களிடம் கல்வி நிறுவனங்கள் இணைப்பு அந்தஸ்தை ஜூலை மாதம் 31-ந்தேதிக்குள் பெற வேண்டும். மாணவர்கள் விண்ணப்பப்பதிவு செய்து, படிப்புகளில் சேர பணம் செலுத்தி, அதனை ரத்து செய்ய விரும்பும் மாணவர்கள் செப்டம்பர் மாதம் 11-ந்தேதிக்குள் தெரிவித்தால் முழு பணமும் திரும்பி கொடுக்கப்படும்.

முதலாம் ஆண்டு வகுப்புகளில் உள்ள காலியிடங்களில் மாணவர் சேர்க்கை என்பது செப்டம்பர் 15-ந்தேதிக்குள் நிரப்பப்பட வேண்டும். அவர்களுக்கான வகுப்புகள் செப்டம்பர் 15-ந்தேதி முதல் தொடங்கப்படும். அதேபோல், நேரடியாக 2-ம் ஆண்டில் சேரும் மாணவர்களும் செப்டம்பர் 15-ந்தேதிக்குள் சேர வேண்டும்.

மேலும் முதுநிலை மேலாண்மை டிப்ளமோ படிப்புகளிலும் மாணவர் சேர்க்கை செப்டம்பர் 15-ந்தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும். தொலைதூர, திறந்த நிலை மற்றும் ஆன்லைன் படிப்புகளை கற்றுத்தரும் கல்வி நிறுவனங்கள் பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும்.


Next Story