அடுத்த ஆண்டு 'நீட்' தேர்வு எப்போது நடக்கும்? தேசிய தேர்வு முகமை பதில்

அடுத்த ஆண்டு (2023) நீட் தேர்வு நடைபெறும் தேதியை தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) வெளியிட்டு இருக்கிறது.
சென்னை,
முதன்மையாக திகழும் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கு மாணவ-மாணவிகளின் திறனை மதிப்பிடுவதற்காக, தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு தேர்வுகளை நடத்தி வருகிறது. மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் வரும், இந்த அமைப்பு நம்பகமான, திறமையான, வெளிப்படையான, நியாயமான மதிப்பீடுகளை உருவாக்கி அதன் மூலம் மாணவர்கள் சேர்க்கைக்கு ஒரு பாதையை வழிவகுத்து கொடுக்கிறது.
அந்த வகையில் இந்த தேர்வு முகமை நீட், ஜே.இ.இ., 'கியூட்' உள்பட சில முக்கியமான தேர்வுகளை நடத்தி அதன் மூலம் என்ஜினீயரிங், மருத்துவம், பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கு தகுதியானவர்களை தேர்வு செய்து வழங்குகிறது. இந்த நிலையில் தேசிய தேர்வு முகமை சார்பில் அடுத்த ஆண்டு (2023) நடத்தப்பட இருக்கும் தேர்வுகள் குறித்த அட்டவணையை நேற்று வெளியிட்டு இருக்கிறது. அதன் விவரம் வருமாறு:-
நீட், ஜே.இ.இ. தேர்வு எப்போது?
என்ஜினீயரிங் சார்ந்த படிப்புகளில் சேருவதற்கான ஜே.இ.இ. முதன்மைத் தேர்வு (முதல்கட்டம்) அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 24, 25, 27, 28, 29, 30, 31-ந் தேதிகளிலும், 2-ம் கட்ட ஜே.இ.இ. முதன்மைத் தேர்வு வருகிற ஏப்ரல் மாதம் 6, 8, 10, 11, 12-ந் தேதிகளிலும் நடத்தப்படும்.
அதேபோல், மருத்துவ படிப்புகளில் சேருவதற்காக அனைத்து மாணவ-மாணவிகளாலும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் நீட் தேர்வு அடுத்த ஆண்டு மே மாதம் 7-ந் தேதி நடத்தப்பட இருக்கிறது. இது தவிர, பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வு என்று அழைக்கப்படும் 'கியூட்' தேர்வு அடுத்த ஆண்டு மே மாதம் 21-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடத்தப்பட உள்ளது. மேலும் ஐ.சி.ஏ.ஆர். ஏ.ஐ.இ.இ.ஏ. தேர்வு 26, 27, 28, 29-ந் தேதிகளில் நடத்தப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






