பழனி சத்யாநகரில் ரெயில்வே மேம்பால பணிகள் தொடங்குவது எப்போது?
பழனி சத்யாநகர் புதுதாராபுரம் சாலையில் ரெயில்வே மேம்பால பணிகள் எப்போது தொடங்கப்படும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
ரெயில்வே மேம்பாலம்
பழனி சத்யாநகர் புதுதாராபுரம் சாலையில் ரெயில்வேகேட் உள்ளது. பழனியில் இருந்து தொப்பம்பட்டி சுற்றுப்புற பகுதிகள், தாராபுரம், ஈரோடு, சேலம், திருப்பூர் உள்ளிட்ட வெளியூருக்கு செல்லும் வாகனங்கள் இந்த கேட்டை கடந்து செல்கின்றன.
ரெயில் நிலையத்தையொட்டி இந்த ரெயில்வே கேட் உள்ளது. இதனால் ரெயில் கேட்டை அடைக்கும்போது சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்பதும், திறக்கும்போது கடும் நெரிசல் ஏற்பட்டு அதன்பிறகு வாகனங்கள் கடந்து செல்வதும் வாடிக்கையாகி விட்டது.
இதனால் காலை, மாலை வேளையில் இந்த கேட்டை கடந்து செல்ல மக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். எனவே சத்யாநகர் ரெயில்வேகேட் குறுக்கே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது மக்களின் நீண்டகால கோரிக்கை ஆகும். ஆனால் அது கிணற்றில் போட்ட கல்லாகவே இருந்து வந்தது.
பொதுமக்கள் எதிர்பார்ப்பு
இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழனி சத்யாநகரில் மேம்பாலம் அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயாரிப்பு, நில அளவீடு பணிகள் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் அதன்பிறகு எவ்வித பணிகளும் நடைபெறாததால் ரெயில்வே மேம்பால பணி எப்போது தொடங்கப்படும் என்று பொதுமக்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் உள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
தமிழ்வேந்தன் (புதுநகர்) : திண்டுக்கல்-பொள்ளாச்சி 4 வழிச்சாலை பணிகள் தற்போது முடியும் தருவாயில் உள்ளது. எனவே அந்த சாலை பயன்பாட்டுக்கு வரும்போது புதுதாராபுரம் சாலை வழியாக வரும் வாகனங்கள் இந்த ரெயில்வே கேட்டை கடந்து தான் பழனிக்கு வர முடியும். இதேபோல் நகர விரிவாக்கம், வாகன பெருக்கத்துக்கு ஏற்ப பழனி நகர வளர்ச்சிக்கு சாலை விரிவாக்கம், மேம்பாலங்கள் அவசிய தேவை. எனவே போக்குவரத்து நெரிசல், விபத்தை தடுக்க சத்யாநகர் ரெயில்வே மேம்பால கட்டுமான பணிகளை விரைந்து தொடங்க வேண்டும்.
ஆம்புலன்ஸ் செல்வதில் சிரமம்
சத்தியமூர்த்தி (அன்புநகர்) : பழனி புறநகர் பகுதிகளான பாண்டியன் நகர், ஜவகர் நகர், அன்பு நகர், கலிக்கநாயக்கன்பட்டி மக்கள், தொழிலாளர்கள், மாணவ-மாணவிகள் இந்த கேட்டை கடந்தே வருகின்றனர். தினமும் மாலை நேரத்தில் அடுத்தடுத்து ரெயில்வே கேட்டை மூடும்போது சுமார் 20 நிமிடம் வரை காத்திருக்க நேரிடுகிறது. அந்த நேரத்தில் 200-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சாலையின் இருபுறமும் அணிவகுத்து நிற்கும். மேலும் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் வந்தால் கடும் சிரமம் ஏற்படுகிறது. இதேபோல் கேட் திறக்கும்போது ஒருவரையொருவர் முண்டியடித்து செல்வதால் விபத்தும் ஏற்படுகிறது. எனவே சத்யாநகரில் மேம்பால பணிகளை விரைவில் தொடங்க வேண்டும்.
ரெயில்வே மேம்பால பணிகளை எதிர்பார்த்து, அப்பகுதி மக்கள் வழிமேல் விழி வைத்து காத்திருக்கின்றனர்.