4 ஆண்டுகளாக பூட்டி கிடக்கும் சிவகங்கை பூங்கா திறக்கப்படுவது எப்போது?
4 ஆண்டுகளாக பூட்டி கிடக்கும் சிவகங்கை பூங்காவில் ஸ்மார்ட்சிட்டி பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் எப்போது திறக்கப்படும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
4 ஆண்டுகளாக பூட்டி கிடக்கும் சிவகங்கை பூங்காவில் ஸ்மார்ட்சிட்டி பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் எப்போது திறக்கப்படும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சிவகங்கை பூங்கா
தஞ்சை பெரியகோவிலுக்கு அருகே சிவகங்கை பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் மாமன்னன் ராஜராஜசோழனால் உருவாக்கப்பட்ட சிவகங்கை குளம் உள்ளது. இதைச் சுற்றி பொதுமக்களுக்கான பூங்கா ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1871-72-ம் ஆண்டில் அமைக்கப்பட்டது. அவ்வப்போது முந்தைய நகராட்சி நிர்வாகம் காலத்துக்கேற்றவாறு புனரமைப்பு பணிகள் செய்து வந்தது. தஞ்சை மாநகர மக்களின் பொழுதுபோக்கு இடமாக இந்த பூங்கா திகழ்ந்தது. தஞ்சை பகுதி மக்கள் மட்டுமல்லாமல், வெளியூர் மக்களுக்கும் இந்த பூங்கா பிரபலமானது.
இதனால் பெரியகோவிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த பூங்காவுக்கும் செல்வது வழக்கம். இந்த பூங்காவில் நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்வர். விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். 150 ஆண்டுகள் கடந்த இந்த பூங்காவை ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.8.10 கோடி மதிப்பில் புனரமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. ஸ்மார்ட்சிட்டி பணிகளை மேற்கொள்வதற்காக இந்த பூங்கா கடந்த 2019-ம் ஆண்டு ஏப் 1-ந் தேதி மூடப்பட்டது. இந்த பணிகளை 18 மாதங்களில் முடிக்க மாநகராட்சி நிர்வாகம் இலக்கு நிர்ணயித்தது.
மறுவடிவமைப்பு
இந்த திட்டத்தின் மூலம் பூங்காவில் அதிநவீன பொழுதுபோக்கு சாதனங்கள், கட்டமைப்புகளை உருவாக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் பூங்காவுக்கு அருகில் பெரியகோவில் இருப்பதால், அதனுடைய தோற்றத்தை மறைக்கும் விதமாக உயரமான கட்டமைப்புகளுக்கு இந்திய தொல்லியல் துறை அனுமதி வழங்கவில்லை. பின்னர் மாநகராட்சி நிர்வாகத்தினரும், இந்திய தொல்லியல் துறையினரும் பேச்சுவார்த்தை நடத்தி பெரியகோவிலை பாதிக்காத அளவுக்கு திட்டப் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
மேலும் பொழுதுபோக்கு ரெயில், தொங்கு பாலம், கழிப்பறை உள்ளிட்ட திட்டங்களும் நீக்கப்பட்டன. மறு வடிவமைப்பு செய்யப்பட்ட புதிய திட்டத்துக்கு ரூ.6.86 கோடிக்கு மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. இப்புதிய திட்டத்தின் மூலம் குழந்தைகள் விளையாட்டுத் திடல், ஆலமரத்தடியைச் சுற்றி இருக்கைகள், விலங்குகள் சிற்ப அரங்கம், நவீன முறையில் நீருற்றுகளுடன் புதிய புல் தரை அரங்கம், தஞ்சை வரலாறு, பாரம்பரியத்தை விளக்கும் வகையில் 3 நீண்ட சுவர்களில் புடைப்புச் சிற்பங்களுடன் கூடிய கதை அரங்கம் உள்ளிட்டவை அமைக்கப்படுகின்றன.
எதிர்பார்ப்பு
மேலும், இந்த வளாகத்தில் உள்ள சோழர் காலத்தை சேர்ந்த சிவகங்கை குளத்தில் நவீன படகு சவாரி, படகு தளம், குளத்தின் நடுவில் உள்ள கோவில் புனரமைப்பு உள்ளிட்ட பணிகள் செய்ய திட்டமிடப்பட்டது. இந்த மறு வடிமைப்பு காரணமாக சிவகங்கை பூங்காவில் ஸ்மார்ட்சிட்டி திட்ட பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. ஆனால், இந்த திட்ட பணிகள் தொடங்கப்பட்டு 4 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது.
ஏற்கனவே, இருந்த பல கட்டமைப்புகள் ஆங்காங்கே இடிக்கப்பட்டு கிடக்கின்றன. புதிய கட்டுமான பணிகளும் ஆமை வேகத்தில் நடைபெறுவதால், இந்த பூங்காவை மீண்டும் திறப்பதில் இழுபறி நிலவுகிறது. எனவே மெதுவாக நடைபெறும் பணியை வேகமாக செய்து பூங்காவை விரைவில் திறக்க வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாகும்.
காத்திருப்பு
இதுகுறித்து பொதுமக்கள் சிலர் கூறும்போது, தஞ்சையில் உள்ள முதன்மையான சுற்றுலா தலங்களில் சிவகங்கை பூங்காவும் ஒன்று. ஆனால், இந்த பூங்கா 4 ஆண்டுகளாக மூடப்பட்டு கிடப்பதால் வெளியூரில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
இந்த திட்டத்துக்கு பிறகு தொடங்கப்பட்ட பழைய பஸ் நிலையம், சரபோஜி மார்க்கெட், காமராஜர் மார்க்கெட், ராஜப்பா பூங்கா, தஞ்சை அருங்காட்சியகம், குடிநீர் திட்டம் உள்ளிட்ட பணிகள் முடிக்கப்பட்டு, செயல்பாட்டுக்கு வந்துவிட்டன. எனவே 4 ஆண்டுகளாக மூடிக் கிடக்கும் சிவகங்கை பூங்கா எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்புடன் குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் காத்துக் கிடக்கின்றனர். தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் பணிகளை முடித்து இருந்தால் பூங்கா திறக்கப்பட்டு, வருமானமும் நன்றாக கிடைத்து இருக்கும் என்றனர்