ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்குவது எப்போது?
சிவகாசி, திருத்தங்கல் பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி எப்போது தொடங்கப்படும் என்பது குறித்து ரெயில்வே கோட்ட மேலாளரிடம் விருதுநகர் எம்.பி. மாணிக்கம்தாகூர் ஆலோசனை நடத்தினார்.
சிவகாசி,
சிவகாசி, திருத்தங்கல் பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி எப்போது தொடங்கப்படும் என்பது குறித்து ரெயில்வே கோட்ட மேலாளரிடம் விருதுநகர் எம்.பி. மாணிக்கம்தாகூர் ஆலோசனை நடத்தினார்.
ரெயில்வே மேம்பாலம்
சிவகாசி அருகே உள்ள சாட்சியாபுரத்தில் ரெயில்வே லெவல் கிராசிங் உள்ளது. காலை, மாலை நேரங்களில் இந்த பகுதியை ரெயில் கடந்து செல்லும் போது அதிக அளவில் வாகனங்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் இந்த பகுதியில் தேவையில்லாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. கடந்த 10 மாதங்களுக்கு முன்னர் ரெயில்வே ேமம்பாலம் அமைக்க தேவையான இடம் கையகப்படுத்தும் பணிக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கும் முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால் கடந்த 10 மாதங்களாக அடுத்த கட்ட பணிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடங்காமல் உள்ளனர்.
ஆலோசனை
இதற்கிடையில் விருதுநகர் எம்.பி., மாணிக்கம்தாகூர், ரெயில்வே அதிகாரி ஆனந்தை நேரில் சந்தித்து சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி-விருதுநகர் ரோட்டில் ரெயில்வே மேம்பால கட்டுமான பணிகள் எப்போது தொடங்கப்படும்? அந்த பணியின் போது அந்த வழியாக செல்லும் வாகனங்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் மாற்று பாதை அமைத்து கொடுப்பது, பணிகளை விரைந்து தொடங்கி, தரமானதாக செய்ய தேவையான நடவடிக்கையை எடுக்க வலியுறுத்தினார்.
இந்த கோரிக்கைகளை கேட்ட ரெயில்வே அதிகாரி, பணிகளை விரைந்து தொடங்க உள்ளதாகவும், அதற்கு முன்னர் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இந்த ஆலோசனையின் போது ரெயில்வே கோட்ட உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவு மாநில தலைவர் சின்னதம்பி மற்றும் பலர் உடனிருந்தனர்.