குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் கட்டும் பணி முடிவது எப்போது?


குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் கட்டும் பணி முடிவது எப்போது?
x
தினத்தந்தி 19 Feb 2023 12:15 AM IST (Updated: 19 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் கட்டும் பணி முடிவது எப்போது? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறையில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் கட்டும் பணி முடிவது எப்போது? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

ஆற்றங்கரை மக்கள்

வால்பாறை பகுதியில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை பெய்யக்கூடிய தென்மேற்கு பருவமழை காலத்தில் வாழைத்தோட்டம், கக்கன் காலனியில் உள்ள வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இவர்களுக்கு பாதுகாப்பான இடத்தில் வீடுகள் கட்டித்தர தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி காமராஜர் நகர் பகுதியில் 2¼ ஏக்கர் பரப்பளவில் ரூ.8 கோடி மதிப்பில் 112 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது. ஆனால் இதுவரை பணி முடியவில்லை. கடந்த 3 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் பணி நடைபெற்று வருகிறது.

கிடப்பில் போடப்பட்டது

இதற்கிடையில் வீடுகள் தேவைப்படுவோர் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு செய்யப்பட்டது. இதற்கு நூற்றுக்கணக்கானோர் விண்ணப்பித்து, அதற்கான பங்கு தொகையையும் செலுத்த தயாராக உள்ளனர். ஆனால் அவர்களுக்கு, குடிசை மாற்று வாரியம் மூலம் எந்தவித பதிலும் வரவில்லை.

இது தவிர சில அடுக்குமாடி குடியிருப்புகளில் கட்டிட பணி முடிவடைந்த நிலையில் மின் இணைப்பு, குடிநீர் வசதி, வர்ணம் பூசுதல், கதவு-ஜன்னல் பொருத்துதல் போன்றவை நடைபெறாமல் கிடக்கிறது. மற்ற அடுக்குமாடி குடியிருப்புகள் அஸ்திவாரம் போடப்பட்ட நிலையில் கிடப்பில் உள்ளது.

விரைந்து முடிக்க வேண்டும்

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

வருகிற ஜூன் மாதம் மீண்டும் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளது. ஆனால் ஆற்றங்கரையில் வசிக்கும் மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி முடியவில்லை. இதனால் மீண்டும் அவர்கள் வெள்ளத்தில் தத்தளிக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே விரைந்து பணியை முடித்து, தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு வீடுகளை வழங்குவதற்கு குடிசை மாற்று வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story