நலிவடைந்து வரும் தென்னை நார் தொழில் புத்துயிர் பெறுவது எப்போது?
நலிவடைந்து வரும் தென்னை நார் தொழில் புத்துயிர் பெறுவது எப்போது?
தமிழகத்தில் தென்னை விவசாயம் என்றாலே, அது கோவை மாவட்டம் பொள்ளாச்சியைத்தான் நினைவுபடுத்தும். அந்த அளவிற்கு தென்னை விவசாயத்தில் புகழ் பெற்று விளங்குகிறது. இதனால் தென்னை நகரம் என்ற சிறப்பு பெயரையே பெற்றுள்ளது. ஆனால் தற்போது அந்த புகழ் மங்கிவிடுமோ? என்ற அச்சம் தென்னை விவசாயிகள் மற்றும் தென்னை நார் உற்பத்தியாளர்களிடையே நிலவுகிறது. இதற்கு காரணம், தென்னை நார் தொழில் நலிவடைந்து வருவதே ஆகும். இந்த நிலைக்கு அந்த தொழில் செல்ல காரணம் என்ன?, மீண்டும் புத்துயிர் பெற வைக்க வழி என்ன? என்பது குறித்து இக்கட்டுரையில் காண்போம்...!
தென்னை நார் தொழில்
கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது. இங்கிருந்து தேங்காய், இளநீர், கொப்பரை மற்றும் தென்னை நார் தொடர்புடைய பொருட்கள் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்காக கோவை மாவட்டத்தில் மட்டும் சுமார் 700 தென்னை நார் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து 80 சதவீதம் தென்னை நார் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இது தவிர மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களும் தயாரிக்கப்படுகிறது.
இந்த நிலையில் விலை வீழ்ச்சி காரணமாக தென்னை விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக தென்னை விவசாயத்தை சார்ந்த தென்னை நார் தொழிலும் நலிவடைந்து முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது. இதனால் உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர். இது திவர தென்னை நார் தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் உள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழப்பை சந்திக்க வாய்ப்பு உருவாகி வருகிறது.
எனவே ஆண்டுக்கு கோடிக்கணக்கில் அன்னிய செலாவணியை ஈட்டி தரும் தென்னை நார் தொழில் மீண்டும் புத்துயிர் பெற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுப்பது எப்போது? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதுகுறித்து தேசிய தென்னை நார் கூட்டமைப்பு தலைவர் கவுதமன் கூறியதாவது:-
தமிழகம் முதலிடம்
உலக தென்னை நார் உற்பத்தியை பொறுத்தவரை இந்தியாவில் மட்டும் 70 சதவீதம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரை தமிழகம்தான் தென்னை உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. தற்போது உலக பொருளாதார வீழ்ச்சி, ரஷியா-உக்ரைன் போர் காரணமாக தென்னை நார் ஏற்றுமதி பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் நேரடியாக உபயோகப்படுத்தப்படும் மதிப்பு கூட்டு பொருட்களின் எதிர்பார்ப்பு காரணமாக 60 முதல் 70 சதவீதம் வரை தென்னை நார் உற்பத்தி குறைந்து விட்டது. தென்னை நாரில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்க முடியும். இதற்கு உலக நாடுகளில் வரவேற்பு உள்ளது. அதில் ஒன்றான மரப்பலகை உற்பத்தியை மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து தொடங்க வேண்டும். இதன் மூலம் தமிழகத்தில் தென்னை நார் உற்பத்தியை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கன்டெய்னர் வாடகை
தென்னை நார் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் சுதாகர்:-
பருவநிலை மாற்றம் காரணமாக தென்னை நாரை காய வைக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. தென்மேற்கு பருவமழை முடிந்ததும், வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கி விடுகிறது. இதற்கிடையில் தென்னை நார் விலையும் குறைந்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் கிலோ ரூ.10-க்கு விற்பனையான தென்னை நார் தற்போது கிலோ ரூ.5-க்குதான் விற்பனை ஆகிறது.
கொரோனா பரவல் முடிந்து தொழில் மீண்டு வரும் நிலையில், வெளிநாடுகளுக்கு தென்னை நார் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படும் கன்டெய்னர், கப்பல் வாடகை உயர்ந்து உள்ளது. குறிப்பாக கன்டெய்னர் வாடகை 1,500 டாலரில் இருந்து 10 ஆயிரம் டாலராக உயர்ந்து உள்ளது. இது தவிர தென்னை நார் பொருட்கள் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது. இதனால் தென்னை நார் ஏற்றுமதி ஆண்டுக்கு ரூ.2,500 கோடியில் இருந்து ரூ.1,500 கோடியாக குறைந்து விட்டது. மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெள்ளை நிற பட்டியலில் இருந்த தென்னை நார் தொழிலை ஆரஞ்சு நிறத்துக்கு மாற்றி விட்டது. இதன் காரணமாக தென்னை நார் தொழிலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. சுற்றுச்சூழல் மாசுபடுவதாக பொய் பிரசாரம் செய்யப்படுகிறது என்றும், தென்னை நார் இயற்கையான பொருட்களை கொண்டதுதான், அதில் வேதிப்பொருட்களை சேர்ப்பதில்லை என்றும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளோம். ஆரஞ்சு பட்டியலில் இருந்து தென்னை நார் தொழிலை மீண்டும் வெள்ளை நிற பட்டியலுக்கு மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மின் கட்டணம் உயர்வு
தென்னை நார் உற்பத்தியாளர் அன்பரசன்:-
ரஷியா-உக்ரைன் இடையேயான போரின் காரணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு தென்னை நார் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுவதில்லை. உலக பொருளாதார மந்த நிலை காரணமாக பொருட்கள் வாங்கும் திறன் குறைந்து விட்டது.
ஏற்கனவே தென்னை நார் தொழிலை சிரமத்திற்கு மத்தியில் நடத்தி வரும் நிலையில் மின் கட்டண உயர்வு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. 30 சதவீதம் வரை கூடுதலாக மின் கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. தென்னை நார் கட்டி ஒரு கிலோ ரூ.28-ல் இருந்து ரூ.13 ஆக குறைந்துவிட்டது. இதனால் ஒவ்வொரு தொழிற்சாலைகளிலும் சுமார் 100 டன் தென்னை நார் கட்டிகள் தேக்கம் அடைந்து உள்ளது. உற்பத்தி குறைவாக உள்ள காலத்திலேயே தேக்கம் அடைந்து இருக்கும் நிலையில், டிசம்பர் மாதம் முதல் உற்பத்தி அதிகரிக்கும்போது என்ன செய்வது என்று தெரியவில்லை. விலை வீழ்ச்சி, ஏற்றுமதி குறைவு போன்ற காரணங்களால் தற்போது தென்னை நார் தொழிற்சாலைகள் இயங்கும் நேரமும் பாதிக்கும் மேல் குறைந்து விட்டது. தொடர்ந்து இதே நிலை நீடித்தால் தென்னை நார் தொழிலை நடத்துவது கேள்விகுறியாகி விடும்.
தொழிற்சாலைகள் மூடல்
தென்னை நார் உற்பத்தியாளர் ரங்கம்புதூர் முத்துக்குமார்:-
தற்போதைய சூழ்நிலையில் 500-க்கும் மேற்பட்ட தென்னை நார் தொழிற்சாலைகள் இயங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. சீனாவிற்கு ஏற்றுமதி இல்லை. தென்னை நார் விலை குறைந்து விட்டது. மின் கட்டண உயர்வு, கன்டெய்னர் வாடகை உயர்வு, ஆட்கள் கூலி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் உற்பத்தி செய்த பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. 15 எச்.பி. மின் மோட்டார் இருந்த தொழிற்சாலையில் குறைந்தபட்சம் ரூ.3,900 மின் கட்டணம் செலுத்தி வந்தோம். தற்போது ரூ.15 ஆயிரம் வரை செலுத்த வேண்டி உள்ளது. இதனால் மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில் தென்னை நார் தொழிற்சாலைகளை இயக்கி வருகிறோம். இதனால் தொழிலை நடத்த முடியாத சூழ்நிலையில் பாதி தென்னை நார் தொழிற்சாலைகள் மூடப்பட்டு உள்ளன.
(பாக்ஸ்)தென்னை நார் தொழிலை பாதுகாக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ன?
தென்னை நார் தொழிலை பாதுகாக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசின் கயிறு வாரிய தலைவர் குப்புராமு கூறியதாவது:-
இந்தியாவில் இருந்து தென்னை நாரை சீனா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம். அங்கு அவர்கள் மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரித்து விற்பனை செய்கின்றனர். எனவே இந்தியாவிலேயே மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரித்தால் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். இதற்கான முயற்சியை கயிறு வாரியம் மேற்கொண்டு வருகிறது. மேலும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்க தொழிற்சாலை அமைக்க மத்திய அரசு மூலம் கொடுக்கப்பட்ட கடனுதவி ரூ.25 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இதற்கு 25 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. மேலும் சிறு தொழிற்சாலைகள் இணைந்து கூட்டுக்குழுமம் அமைத்து மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்கும் தொழிலை மேற்கொண்டால் ரூ.5 கோடி வரை கடனுதவி அளிக்கப்படுகிறது. இதற்கு 90 சதவீதம் மானியம் அளிக்கப்படுகிறது. ரஷியா-உக்ரைன் போர் காரணமாக உலக பொருளாதார மந்த நிலை ஏற்பட்டு உள்ளது. இது தென்னை நார் தொழிலுக்கு மட்டுமல்ல எல்லா தொழில்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்கத்திய நாடுகளில் உலக பொருளாதார மந்த நிலை சீராக ஓராண்டுக்கு மேல் ஆகலாம். இதனால் தேக்க நிலையை சரிசெய்வதற்கு வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் ஓரிரு மாதங்களில் தேக்க நிலை குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. ஜியோ டெக்ஸ்டைல்சை 5 சதவீதம் வரை பயன்படுத்தி கிராமப்புறங்களில் சாலை அமைக்க 7 மாநிலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது சாலை போக்குவரத்து அமைச்சகம் இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் சாலை அமைக்க அனுமதி அளித்து உள்ளது. இதன் மூலம் தென்னை நாரின் தேவை அதிகரிக்கும். கடந்த 2020-21-ம் ஆண்டு ரூ.3,770 கோடிக்கு தென்னை நார் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது. 2021-22-ம் ஆண்டு ரூ.4340 கோடியாக ஏற்றுமதி அதிகரித்து உள்ளது. இதுபோன்று தென்னை நார் தொழிலை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தேங்காய் மட்டைகள் தேக்கம்
பொள்ளாச்சி அருகே உள்ள கோடங்கிபட்டியை சேர்ந்த சேதுராமலிங்கம்:-
கடந்த ஆண்டு கருப்பு நிற தேங்காய் மட்டை ஒன்று ரூ.2-க்கும், பச்சை நிற மட்டை ஒன்று ரூ.2.50-க்கும் விற்பனை ஆனது. தற்போது கருப்பு மட்டை 20 பைசாவுக்கும், பச்சை மட்டை 30 பைசாவுக்கும் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படுகிறது. மாசு கட்டுப்பாட்டு வாரியம் தென்னை நார் தொழிலை ஆரஞ்சு பட்டியலுக்கு மாற்றியதால் 50 சதவீத தென்னை நார் தொழிற்சாலைகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் உற்பத்தியிலும் 50 சதவீத தேங்காய் மட்டைகள் தேக்கம் அடைந்து உள்ளது. ஏற்கனவே தேங்காய், கொப்பரை விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், மட்டை விலையும் குறைந்து உள்ளதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. தென்னை நார் தொழில் புத்துயிர் பெற்றால்தான் தேங்காய் மட்டை விலை உயரும்.
கிணத்துக்கடவு அருகே உள்ள நல்லட்டிபாளையத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன்:-
தென்னை நாருக்கு முக்கிய மூலப்பொருளாக தேங்காய் மட்டை உள்ளது. கடந்த ஆண்டு 1000 தேங்காய் மட்டை ரூ.1,500 வரை விற்பனை ஆனது. தற்போது தோட்டத்தில் இருந்து தென்னை நாரை தொழிற்சாலைக்கு கொண்டு சென்றால் ரூ.500 தான் கிடைக்கிறது. இதே தென்னந்தோப்பில் நேரடியாக கொள்முதல் செய்தால் ரூ.200-க்கு எடுக்கப்படுகிறது. தென்னை நார் தொழில் பாதிப்பு காரணமாக மட்டை விலையும் குறைந்து உள்ளது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.