தனக்கான வேலையை கவர்னர் எப்போது செய்யப்போகிறார்? - அமைச்சர் பொன்முடி கண்டனம்


தனக்கான வேலையை கவர்னர் எப்போது செய்யப்போகிறார்? - அமைச்சர் பொன்முடி கண்டனம்
x

கவர்னர் மாளிகையின் டுவிட்டர் பக்கத்தில் அரசியல் பார்வையுடன் பதிவுகளை இடுவது உள்நோக்கம் கொண்ட விஷமத்தனமான செயல் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னை,

முன்னாள் ராணுவத்தினரின் கோரிக்கையை கவர்னர் மாளிகையின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிடுவது உள்நோக்கம் கொண்ட விஷமத்தனம் என்று அமைச்சர் பொன்முடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "மனிதர்களை பிறப்பால், சாதியால், நிறத்தால், பாலினத்தால் பணத்தால் பாகுபடுத்திப் பார்க்காமல் உரிமைகளை வழங்க வேண்டும் என்கிற பரந்த மானுடப் பார்வை கொண்ட பொதுவுடைமை கருத்தியலை வழங்கியவர் கார்ல் மார்க்ஸ். வேதாளம் முருங்கை மரம் ஏறியதைப் போல் காரல் மார்க்ஸ் பற்றி தேவையற்ற கருத்தை கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்திருக்கிறார்.

வர்க்க பேதமற்ற சமத்துவமே திராவிட இயக்கத்தின் இறுதி இலக்கு என்ற லட்சியத்தை மேற்கொண்டவர்கள் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும். அவர்கள் வகுத்த சமூக நீதிப் பாதையை தேர்ந்தெடுத்து பயணம் செய்தவர் முத்தமிழறிஞர் கருணாநிதி. ஆனால் பத்தாம்பசலி சிந்தனைகளுடன் வர்ண பேதத்தை பாதுகாக்க நினைப்போருக்கு, மார்க்ஸ் கருத்துகள் கசப்பு மருந்துதான். அதை விழுங்க முடியாமல் வாந்தி எடுப்பது போல் கவர்னர் பேசுவது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல, முறையுமல்ல. பாஜக சார்பில் திட்டமிட்டு உள்நோக்கத்துடன் நடந்த போராட்டத்தில் பங்கேற்க செய்யப்பட்ட முன்னாள் ராணுவத்தினரின் கோரிக்கையை கவர்னர் மாளிகையின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிடுவது உள்நோக்கம் கொண்ட விஷமத்தனம். ராஜ்பவனை காபி ஷாப் போல் மாற்றி உள்ளனர். உலகத் தலைவர்களையும், தமிழகத்தின் மாண்பினையும் சிதைப்பதை நிறுத்தி, அவருக்குரிய வேலையை பார்ப்பதே மக்கள் வரிப்பணத்தில் அவர் பெறும் ஊதியத்திற்கு உண்மையானதாக இருக்கும்" என்று அதில் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.


Next Story