பணிகள் முடிந்து உயர்மட்ட பாலம் பயன்பாட்டிற்கு வருவது எப்போது?


பணிகள் முடிந்து உயர்மட்ட பாலம் பயன்பாட்டிற்கு வருவது எப்போது?
x

பணிகள் முடிந்து உயர்மட்ட பாலம் பயன்பாட்டிற்கு வருவது எப்போது? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

பெரம்பலூர்

கோரிக்கை

பெரம்பலூர் அருகே உள்ள கல்பாடி கிராமத்தில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் விவசாயத்தை முக்கிய தொழிலாக செய்து வருகின்றனர். கல்பாடி அருகே ஓடும் மருதையாற்றுக்கு, கிராமத்தில் இருந்து உப்போடை என்றழைக்கப்படும் கிளை ஓடை மூலம் தண்ணீர் சென்று வருகிறது.

இந்த நிலையில் அந்த ஓடை கல்பாடி கிராமத்தை கடந்து செல்லும் இடத்தில் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சறுக்கு பாலம் அமைக்கப்பட்டது. மழைக்காலங்களில் ஓடையில் தண்ணீர் அதிகமாக சென்றபோது சறுக்கு பாலம் மூழ்கி விடுவதால், புதிய பாலம் அமைக்க வேண்டும் என்று அந்த கிராம மக்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.

உயர்மட்ட பாலம்

இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறை, நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டத்தில் சுமார் ரூ.6½ கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி தொடங்கியது. இதனால் தற்போது அந்த கிராம மக்கள், வாகன ஓட்டிகள் அதனருகே தற்காலிகமாக தரைப்பாலமாக அமைக்கப்பட்டுள்ள மாற்றுப்பாதையில் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது அந்த பாலம் கட்டும் பணியில் தொய்வு ஏற்பட தொடங்கியுள்ளது. மழைக்காலம் தொடங்கியுள்ளதால், பாலப்பணிகள் எப்போது நிறைவடையும் என்ற எதிர்பார்ப்பும், அதனை விரைந்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் கிராம மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

வாகன ஓட்டிகள் சிரமம்

கல்பாடி கிராமத்தை சேர்ந்த ராமசாமி:- கிராமத்துக்கு இவ்வளவு பெரிய பாலம் தேவையில்லை. வருங்காலத்தை கருத்தில் கொண்டு பெரிய அளவிலான பாலம் அமைக்கப்பட்டு வருவது வரவேற்கத்தக்கது. தற்போது மாற்றுப்பாதை வழியாக நடந்து செல்பவர்கள், வாகன ஓட்டிகள் சிரமத்துடன் சென்று வருகின்றனர். எனவே பாலம் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

ஓடையில் அதிகளவு தண்ணீர் தேங்கும்

விவசாயி ரெங்கசாமி:- மழைக்காலம் தொடங்கியிருப்பதால் மாற்றுப்பாதையில் ஓடை தண்ணீர் அதிகளவில் தேங்க வாய்ப்பிருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்பவர்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படும். பாலம் அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றாலும், தற்போது தொய்வு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே பாலம் அமைக்கும் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

போக்குவரத்து துண்டிக்கப்பட வாய்ப்பு

விவசாயி பெரியசாமி:- இந்த சாலை பெரம்பலூரில் இருந்து அரியலூருக்கு செல்லும் சாலை என்பதால் பஸ்கள் உள்ளிட்டவை சென்று வருவதற்காக வசதியாக இந்த உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் கொட்டரை மருதையாறு நீர்த்தேக்கம் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. சுற்றுலா தலமாகவுள்ள அந்த நீர்த்தேக்கத்துக்கு இனி வருங்காலங்களில் இந்த வழியாக அதிக மக்கள் சென்று வருவார்கள் என்ற எண்ணத்திலும் இந்த பாலம் உயர்மட்ட பாலமாக அமைக்கப்பட்டு வருகிறது. ஆனால் பாலம் அமைக்கும் பணிகளில் தீபாவளிக்கு பிறகு தொய்வு ஏற்பட தொடங்கியுள்ளது. இதில் ஏதோ காரணம் இருக்கிறது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அதிகமாக பெய்யும் என்று கூறப்படுவதால், தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள மாற்றுப்பாதை ஓடை தண்ணீரில் அடித்து செல்லப்படலாம். கல்பாடி கிராமத்திற்கு போக்குவரத்து துண்டிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் கல்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள், பெரம்பலூருக்கு சென்று வருவது தடைபடும்.

விரைந்து முடிக்க வேண்டும்

மேலும் விவசாய பணிகள் பாதிக்கப்படும். எனவே போர்க்கால அடிப்படையில் பாலப்பணிகளை முறையாக விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது தற்காலிக மாற்றுப்பாதையை சற்று உயர்த்தி, அதில் தார் சாலை அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் உயர்மட்ட பாலம் சற்று குறுகலாக அமைக்கப்பட்டு வருவதால் அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு கட்டிடங்களுக்கு சென்று வருவதற்கு இடையூறு ஏற்படும் என்று தெரிகிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு நடப்பட்டுள்ள மின் கம்பம், ஆம்புலன்சு சென்று வர இடையூறாக உள்ளது. அதனை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். அந்தப்பகுதியில் தேவையில்லாதவற்றை அப்புறப்படுத்தி விட்டு அணுகு சாலையை அகலப்படுத்தி அமைத்து கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story