புதிய பத்திரப்பதிவு அலுவலகம் திறப்பு விழா காண்பது எப்போது?


புதிய பத்திரப்பதிவு அலுவலகம் திறப்பு விழா காண்பது எப்போது?
x
தினத்தந்தி 5 July 2023 7:30 PM GMT (Updated: 6 July 2023 11:18 AM GMT)

தேனியில் ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகம் கட்டி முடித்து பல மாதங்கள் ஆகியும் திறக்கப்படாததால், வாடகை கட்டிடத்தில் செயல்படும் அலுவலகத்தால் அரசு நிதி விரயமாகிறது.

தேனி

பத்திரப்பதிவு அலுவலகம்

தேனி என்.ஆர்.டி. நகரில் பல ஆண்டுகளாக பத்திரப்பதிவு சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டது. அது வாடகை கட்டிடம் என்பதோடு இடநெருக்கடியும் ஏற்பட்டது. பொதுமக்களும் பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வந்து செல்ல சிரமப்பட்டனர். இதனால், கடந்த 2019-ம் ஆண்டு என்.ஆர்.டி. நகரில் இருந்து புதிய பஸ் நிலையம் அருகில் கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையோரம் தனியார் கட்டிடத்தில் பத்திரப்பதிவு அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டது. தொடர்ந்து 4 ஆண்டுகளாக புதிய பஸ் நிலையம் அருகில் வாடகை கட்டிடத்தில் பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இதற்கிடையே பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு சொந்த கட்டிடம் கட்டுவதற்கு பெருந்திட்ட வளாகத்தில் மாவட்ட ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் அருகில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அங்கு ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகம் கட்டுமான பணிகள் தொடங்கி மும்முரமாக நடந்தன. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கட்டுமான பணிகள் முடிந்து திறப்பு விழாவுக்கு தயாராகியது.

விரயமாகும் அரசு நிதி

கட்டுமான பணிகள் முடிந்து 6 மாதங்கள் ஆகியும் இன்னும் வாடகை கட்டிடத்தில் இருந்து சொந்த கட்டிடத்துக்கு பத்திரப்பதிவு அலுவலகம் மாற்றப்படாமல் உள்ளது. தற்போது செயல்படும் வாடகை கட்டிடம் அமைந்துள்ள பகுதியானது பஸ் நிலையத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் செல்லும் பிரதான திட்டச்சாலை ஆகும். இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் சாலையின் அகலம் குறைந்து வாகனங்கள் சென்று வர சிரமம் ஏற்படுகிறது. விபத்து அபாயமும் உள்ளது. அத்துடன் சொந்த கட்டிடம் தயார் நிலையில் இருந்தும் திறப்பு விழா காணாமல் வாடகை கட்டிடத்தில் தொடர்வதால் வாடகை செலுத்தும் வகையில் அரசு நிதி விரயமாகி வருகிறது. எனவே, பத்திரப்பதிவு அலுவலகத்தை சொந்த கட்டிடத்துக்கு இடமாற்றம் செய்ய பதிவுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.


Next Story