பூட்டி கிடக்கும் சமுதாய நலக்கூடம் திறப்பு விழா காண்பது எப்போது
விழுப்புரத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பூட்டி கிடக்கும் சமுதாய நலக்கூடம் திறப்பு விழா காண்பது எப்போது
விழுப்புரம்
விழுப்புரம் வழுதரெட்டி பகுதியில் 1,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஏழை, எளிய மக்கள் தங்களது வீடுகளில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகளை எளிமையான முறையில் நடத்துவதற்கு வசதியாக வழுதரெட்டி கோவிந்தசாமி லே-அவுட் பகுதியில் கடந்த 2009-2010-ம் நிதியாண்டில் விழுப்புரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.15 லட்சம் மதிப்பில் சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டது.
இந்த கட்டிடம் திறக்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்து வந்தது. இதனை ஆரம்ப காலத்தில் கோலியனூர் ஊராட்சி நிர்வாகத்தினர் பராமரித்து வந்தனர். அதன் பிறகு வழுதரெட்டி பகுதி, விழுப்புரம் நகராட்சியுடன் இணைக்கப்பட்ட பிறகு இந்த சமுதாய நலக்கூடத்தை நகராட்சி நிர்வாகத்தினர் சரிவர பராமரிக்காமல் அப்படியே விட்டுவிட்டனர்.
இதன் விளைவு இந்த சமுதாய நலக்கூடம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிப்பின்றி மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்து வருகிறது. பூட்டியே இருப்பதால் இந்த கட்டிடத்தை சமூகவிரோதிகள் சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி இரவு நேரங்களில் மது அருந்துவது, சூதாடுவது உள்ளிட்ட பலவித சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இவர்களின் அட்டகாசத்தால் சமுதாய நலக்கூடத்தின் கதவுகள், மின்விளக்குகள் உள்ளிட்ட அனைத்தும் உடைக்கப்பட்டு சேதமடைந்த நிலையில் உள்ளது.
இந்த சமுதாய நலக்கூடத்தை சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம் பராமரிக்காததால் அரசின் பணம் வீணாகிறது. எனவே இதை பராமரித்து திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இது குறித்து அவர்கள் கூறும்போது இந்த பகுதி ஏழை, எளிய மக்கள் தங்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகளை நடத்தி கொள்வதற்காகத்தான் சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டது. ஆனால் கட்டி முடித்து 10 ஆண்டுகளாக திறக்கப்படாததால் சுப நிகழ்ச்சிகளை நடத்த முடியாமல் மிகவும் சிரமப்படுகிறோம். தனியார் மண்டபங்களில் பணம் செலுத்தி நிகழ்ச்சிகளை நடத்த வேண்டி உள்ளதால் கூடுதல் செலவு ஏற்படுகிறது. எனவே நகராட்சி நிர்வாகத்தினர் விரைந்து செயல்பட்டு இந்த சமுதாய நலக்கூடத்தை நல்ல முறையில் பராமரித்து மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.