அமராவதி ஆற்றின் குறுக்கே ரூ.15 கோடியில் கட்டப்பட்டபாலம் திறக்கப்படுவது எப்போது?


அமராவதி ஆற்றின் குறுக்கே ரூ.15 கோடியில் கட்டப்பட்டபாலம் திறக்கப்படுவது எப்போது?
x

கரூர் அமராவதி ஆற்றின் குறுக்கே ரூ.15 கோடியில் கட்டப்பட்டபாலம் திறக்கப்படுவது எப்போது? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

கரூர்

அமராவதி ஆறு

கரூர் நகர் மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக அமராவதி ஆறு விளங்கி வருகிறது. இந்த ஆறு கோயம்பள்ளி-மேலப்பாளையம் கிராமங்கள் செல்வதால் இந்த கிராமக்களுக்கு இடையே தொடர்பற்ற நிலை இருந்து வந்தது. மேலும் ஒரு கிராமத்தில் இருந்து மற்றொரு கிராமத்திற்கு செல்ல 2 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டியது இருந்தது.

மேலும் வெள்ளக்காலங்களில் கோயம்பள்ளி பகுதி மக்கள் மேலப்பாளையம் வரவேண்டும் என்றால் பஞ்சமாதேவி, பாலம்மாள்புரம் வழியாக கரூர் வந்து அதன்பிறகு பசுபதிபாளையம் வழியாக தான் மேலப்பாளையம் சென்றடைய முடியும். இதனால் வெள்ள காலங்களில் சுமார் 16 கிலோமீட்டர் தூரம் சுற்றி வர வேண்டிய நிலை இருந்தது. மேலும் மழை காலங்களில் இரு கிராம மக்களும் விவசாய இடுபொருட்களை எடுத்து செல்வதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது.

பாலம் கட்டும் பணி முடிந்தது

இதையடுத்து அந்த கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று அமராவதி ஆற்றின் குறுக்கே மேலப்பாளையம்-கோயம்பள்ளி இடையே ரூ.15 கோடி மதிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு பாலம் கட்டும் பணிகள் ெதாடங்கப்பட்டு முடிக்கப்பட்டது. தற்போது 7 ஆண்டுகள் ஆகியும் பாலத்தின் இருபுறமும் இணைப்புச் சாலைகள் அமைக்கப்படாததால் பாலம் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.

இதனால் இரு கரைகளில் வசிக்கக்கூடிய கிராம மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே தற்போதாவது பாலத்தின் இருப்புறங்களிலும் சாலை அமைத்து பாலம் திறக்கப்படுமா? என கிராம பொதுமக்கள் எதிர்ப்பார்த்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். அதன் விவரம் பின்வருமாறு:-

வருத்தம் அளிக்கிறது

சின்னம நாயக்கன்பட்டியைச் சேர்ந்த சேதுராமன்:-

கோயம்பள்ளி-மேலப்பாளையம் கிராமங்களுக்கு இடையே அமராவதி ஆறு செல்வதால் இரு கிராமங்களும் ஒரு தீவுபோல் காட்சி அளித்து வந்தது. இதனால் ஆற்றில் வெள்ளம் ஏற்படும் காலக்கட்டங்களில் விவசாயிகள் ஆற்றை கடந்து செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து பொதுமக்களிடம் கோரிக்கை ஏற்று பல கோடி மதிப்பில் பாலம் கட்டப்பட்டது. ஆனால் இன்று வரை திறக்கப்படாமல் உள்ளது வருத்தம் அளிப்பதாக உள்ளது. பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழக அரசு விரைவில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

16 கிலோமீட்டர் சுற்றி செல்கிறோம்

நரசிம்மபுரத்தைச் சேர்ந்த வெங்கட்ராமன்:-

மேலப்பாளையம் மற்றும் கோயம்பள்ளி பகுதிவாழ் மக்கள் பாலத்தை திறக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. வெள்ளம் வரும்போது இரு கரைகளையும் தண்ணீர் தொட்டு செல்லும். அப்போது நாங்கள் 16 கிலோமீட்டர் சுற்றி கரூர் நகருக்கு வர வேண்டிய சூழல் உள்ளது. மேலப்பாளையத்தில் இருந்து பாலத்தின் வழியாக கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 4 கிலோ மீட்டர் தொலைவில் சென்று விடலாம். ஆனால் பாலம் திறக்கப்படாததால் 16 கிலோமீட்டர் சுற்றி தான் செல்ல வேண்டி சூழல் ஏற்பட்டுள்ளது.

மாணவ-மாணவிகள் அவதி

தாந்தோணி மலையை சேர்ந்த சாமுவேல்:-

கோயம்பள்ளி-மேலப்பாளையம் கிராமங்களை சேர்ந்த பலர் பல்வேறு பணிகள் நிமித்தமாக கரூரில் உள்ள டெக்ஸ்டைல், பஸ் பாடி நிறுவனம், கொசுவலை நிறுவனங்களுக்கு அதிகளவில் சென்று வருகின்றனர். இதேபோல் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் கரூருக்கு தான் படிப்பு விஷயமாக வரவேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் அவர்கள் பல கிலோ மீட்டர் சுற்றி வருகின்றனர். இதனால் காலவிரயம் ஏற்பட்டு வருகிறது. இதனால் பலரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே பாலத்தை உடனடியாக திறந்தால் அனைத்து தரப்பினரும் பயன் பெறுவார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story