துணை வேளாண் விரிவாக்க மையம் திறக்கப்படுவது எப்போது?


துணை வேளாண் விரிவாக்க மையம் திறக்கப்படுவது எப்போது?
x

கோட்டூரில் ரூ.40 லட்சத்தில் கட்டப்பட்ட துணை வேளாண் விரிவாக்க மையம் திறக்கப்படுவது எப்போது? என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

கோயம்புத்தூர்

ஆனைமலை

கோட்டூரில் ரூ.40 லட்சத்தில் கட்டப்பட்ட துணை வேளாண் விரிவாக்க மையம் திறக்கப்படுவது எப்போது? என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

வேளாண் விரிவாக்க மையம்

ஆனைமலை அருகே கோட்டூரில் துணை வேளாண் விரிவாக்க மையம் உள்ளது. இது ரூ.40 லட்சம் செலவில் 105.41 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டது. இந்த துணை வேளாண் விரிவாக்க மையம் கட்டப்பட்டு, ஒரு ஆண்டு கடந்த நிலையில் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது.

இதனால் கோட்டூர், அங்கலக்குறிச்சி, பில்சின்னாம்பாளையம், துரையூர், கம்பாலபட்டி, அர்த்தநாரி பாளையம், ஜல்லிப்பட்டி தென்சங்கம்பாளையம், சோமந்துரை சித்தூர், தென் சித்தூர் பகுதியில் உள்ள விவசாயிகள் வேளாண்மைத்துறை சார்ந்த சேவைகளை பெற முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் அவர்கள் ஆனைமலையில் உள்ள வேளாண் அலுவலகத்திற்கு சென்று வர வேண்டிய நிலை இருக்கிறது.

35 கிலோ மீட்டர் பயணம்

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

கோட்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள விவசாயிகள் தங்களது விளைநிலங்களுக்கு உரம், விதை, ஏதேனும் மானியம் தேவைப்பட்டாலோ அல்லது புதிதாக வரும் திட்டத்தை தெரிந்துகொள்ளவோ ஆனைமலையில் உள்ள வேளாண் அலுவலகத்திற்கு 35 கிலோ மீட்டர் பயணித்து செல்ல வேண்டியுள்ளது.

இதற்கிடையில் துணை வேளாண் விரிவாக்க மையம், கோட்டூரில் கட்டப்பட்டது. ஆனால் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. அது திறக்கப்பட்டால், சுற்றியுள்ள 10 கிராம விவசாயிகளுக்கும் பயனுள்ளதாக அமையும்.

திறக்க வேண்டும்

நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் கிடப்பதால், அந்த துணை வேளாண் விரிவாக்க மையம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. சுற்றுச்சுவர் இல்லாததால் சமூக விரோதிகள் அங்கு அமர்ந்து மதுபானம் அருந்துவதோடு, மதுபாட்டில்களை உடைத்து வீசுகின்றனர். உடைந்த பாட்டில் துண்டுகள், அதன் அருகில் உள்ள சந்தைக்கு வந்து செல்லும் பொதுமக்களின் பாதங்களை பதம் பார்க்கிறது. இதை தடுக்க துணை வேளாண் விரிவாக்க மையத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைத்து, விரைவாக திறக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story