திருவட்டார் தாலுகா அலுவலகம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?


திருவட்டார் தாலுகா அலுவலகம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?
x

திருவட்டார் தாலுகாவிற்கு குலசேகரம் செருப்பாலூரில் புதியதாக கட்டப்பட்ட அலுவலகத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கன்னியாகுமரி

குலசேகரம்,

திருவட்டார் தாலுகாவிற்கு குலசேகரம் செருப்பாலூரில் புதியதாக கட்டப்பட்ட அலுவலகத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய தாலுகாக்கள் உதயம்

குமரி மாவட்டத்தில் கல்குளம், விளவங்கோடு, தோவாளை, அகஸ்தீஸ்வரம் என 4 தாலுகாக்கள் இருந்தன. இந்தநிலையில் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அ.தி.மு.க. ஆட்சியின் போது புதியதாக திருவட்டார் மற்றும் கிள்ளியூர் தாலுகாக்கள் உருவாக்கப்பட்டன. இந்த தாலுகா அலுவலகங்களை சென்னையில் இருந்து காணொலி காட்சி வழியாக கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ந் தேதி அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். அப்போது திருவட்டார் தாலுகா அலுவலகத்திற்காக தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட திருவட்டார் ஊராட்சி ஒன்றிய அலுவலக மேல் தளத்தில் அப்போதைய மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு. வடநேரே குத்துவிளக்கேற்றி வைத்தார்.

புதிய அலுவலகம்

இதையடுத்து திருவட்டார் தாலுகா அலுவலகம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் தாலுகா அலுவலத்திற்கு விரிவான வளாகம் மற்றும் புதிய கட்டிடம் தேவை என்ற நிலையில் குலசேகரம் அருகே உள்ள செருப்பாலூர் பொதுப்பணித்துறை வளாகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு ரூ.3 கோடியே 5 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. இந்த பணிகள் கடந்த ஜனவரி மாதம் நிறைவடைந்தது.

இந்தநிலையில் புதிய கட்டிடம் கட்டும் பணிகள் நிறைவடைந்து 8 மாதங்கள் கடந்த பின்பும் புதிய கட்டிடத்திற்கு தாலுகா அலுவலகம் மாற்றப்படவில்லை.

எனவே, புதிய கட்டிடத்தை திறந்து தாலுகா அலுவலகத்தை அங்கு மாற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இடநெருக்கடி

இதுகுறித்து பேச்சிப்பாறை ஊராட்சி தலைவர் தேவதாஸ் கூறியதாவது:-

திருவட்டார் தாலுகா அலுவலகம் குலசேகரம் செருப்பாலூரில் இயங்கும் வகையில் கடந்த 2021-ம் ஆண்டு புதிய கட்டிடம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டு, கடந்த ஜனவரி மாதம் முடிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் கட்டி முடிக்கப்பட்டு சுமார் 8 மாதங்கள் ஆன பின்னரும் புதிய தாலுகா அலுவலகம் கட்டிடம் திறக்கப்படவில்லை. தற்போது தாலுகா அலுவலகம் செயல்படும் திருவட்டார் ஊராட்சி ஒன்றிய கிராம ஊராட்சி அலுவலக கட்டிடம் இடநெருக்கடியுடன் உள்ளது. எனவே செருப்பாலூரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கட்டிடத்தை உடனே திறந்து தாலுகா அலுவலத்தை செருப்பாலூருக்கு மாற்ற வேண்டும். இதன் மூலம் மலைவாழ் பழங்குடி மக்கள் உள்பட அனைத்துத் தரப்பு மக்களும் பயன் பெறுவர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story