சிவகங்கை மாவட்டத்துக்கு வைகை தண்ணீர் திறப்பது எப்போது? - மதுரை ஐகோர்ட்டில் அரசு தகவல்


சிவகங்கை மாவட்டத்துக்கு வைகை தண்ணீர் திறப்பது எப்போது? - மதுரை ஐகோர்ட்டில் அரசு தகவல்
x
தினத்தந்தி 4 Jan 2023 1:39 AM IST (Updated: 4 Jan 2023 4:19 PM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்துக்கு வைகை தண்ணீர் திறப்பது எப்போது? என்பது குறித்து மதுரை ஐகோர்ட்டில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மதுரை


சிவகங்கை மாவட்டத்துக்கு வைகை தண்ணீர் திறப்பது எப்போது? என்பது குறித்து மதுரை ஐகோர்ட்டில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நாட்டார் கால்வாய்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த காந்தி, மேலப்பசலை உக்கிரபாண்டியன் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-

வைகை ஆற்று நீரைப்பயன்படுத்தி சிவகங்கை மாவட்டம் ராஜகம்பீரம், மேலமேல்குடி உள்பட 16 பெரிய கண்மாய்கள், 10 சிறிய கண்மாய்கள் மற்றும் 25 குளங்கள் மூலம் விவசாய பணிகள் நடக்கும் வகையில் நாட்டார் கால்வாய் அமைந்துள்ளது. இதன்மூலம் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் விவசாயம் நடக்கிறது.

தற்போது வைகை அணையில் போதுமான அளவு தண்ணீர் உள்ளதால் வைகை ஆற்றில் திறக்கப்பட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கண்மாய்களும் நிரம்பி உள்ளன. ஆனால் நாட்டார் கால்வாய்க்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால், எங்கள் பகுதி விவசாயம் பாதிக்கும் நிலை உள்ளது. நாட்டார் கால்வாயில் உடனடியாக தண்ணீர் திறக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில் பதில்

அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, வைகை அணையில் இருந்து ஒப்பந்தப்படி தற்போது ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அது நிறைவேற்றப்பட்ட உடன், ஒப்பந்தப்படி மற்ற பகுதிகளுக்கு வரிசையாக தண்ணீர் திறக்கப்படும். தற்போதைய நிலவரப்படி மனுதாரர் பகுதிக்கு தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை. சுழற்சி அடிப்படையில் தண்ணீர் திறக்கப்படும் என தெரிவித்தார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இதுதொடர்பாக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு, வழக்கை வருகிற 19-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Next Story