தமிழகத்தில் எப்போது தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் - முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சு
தமிழகத்தில் எப்போது தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
கண்டன ஆர்ப்பாட்டம்
கரூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு நேற்று கரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில், பெருகி வரும் கள்ளச்சாராயம், கஞ்சா மற்றும் போலி மதுபானங்களால் ஏற்படும் இறப்பு, கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
கரூர் தமிழகம் மட்டுமல்ல இந்திய துணை கண்டத்திலேயே பெயர் பெற்ற நகரம். தொழில் நகரம். உலக நாடுகளுக்கு ஜவுளி ஏற்றுமதி செய்யக்கூடிய நகரம். சேர மன்னனின் தலைநகரமாக இருந்த கரூரில், இன்று கள்ளச்சாராயத்தால் இறந்தவர்களுக்கு வக்காலத்து வாங்கும் கூட்டணி கட்சியினர் இருக்கிறார்கள். கூட்டணி கட்சியினர் எல்லாம் வாயை மூடிக்கொண்டு இருக்கிறார்கள். ஆடியோ வெளியானதால் நிதி அமைச்சர் இலாகா மாற்றப்பட்டுள்ளது.
வேடிக்கை
கரூரில் 10 நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் பெண் அதிகாரியை தி.மு.க.வினுடைய மகளிர் குண்டர் படை சூழ்ந்து கொண்டு தாக்கியதை பொதுமக்கள் பார்த்தீர்கள். பெண்களுக்கு பாதுகாப்பு இருப்பதாக சொல்லும் திராவிட மாடல் அரசு இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. அமைச்சரின் இலாகா மட்டும் மாற்றப்படவில்லை. மக்கள் நலனில் அக்கறையுள்ள முதல்-அமைச்சராக இருந்தால் அமைச்சர் மீது புகார் வரும்போது விசாரிக்க வேண்டும். தவறு இருந்தால் அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். இதற்கெல்லாம் உதாரணமாக இருந்தவர் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா. கள்ளச்சாராயம் தமிழகத்தில் இல்லை என டி.ஜி.பி. சொல்கிறார். 22 பேர் இறந்த பிறகு கூட பேட்டியளித்தார். ஆனால் சோதனை நடத்தியதில் 25 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் என கூறுகிறார்கள். தமிழகத்தில் சர்வசாதாரணமாக கஞ்சா கிடைக்கிறது. அதிலும் கரூரில் அதிகமாக புழங்குகிறது. தேர்தல் வாக்குறுதியில் பூரண மதுவிலக்கு என்று கூறினார்கள். தற்போது அப்படி அறிவிக்கவில்லை என சொல்கிறார்கள்.
5 ஆயிரம் பஸ்கள் இயங்கவில்லை
போக்குவரத்து துறையில் சென்னையில் 3,300 பஸ்கள் இயக்க வேண்டியதில் 900 பஸ்கள் இயக்கப்படவில்லை. தமிழகம் முழுவதும் 5,000 பஸ்கள் இயங்கவில்லை. தமிழகத்தில் எப்போது தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமையப்போவது உறுதி. இவ்வாறு அவர் கூறினார்.
இதில் அமைப்பு செயலாளர் சின்னசாமி, மாவட்ட அவைத்தலைவர் திருவிகா, பொருளாளர் எம்.எஸ்.கண்ணதாசன், துணை செயலாளர் ஆலம் தங்கராஜ், இணை செயலாளர் மல்லிகா சுப்பராயன், எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் தானேஷ் என்கிற முத்துக்குமார், கரூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பாலமுருகன், நகர செயலாளர் வி.சி.கே.ஜெயராஜ், கரூர் மத்திய வடக்கு பகுதி செயலாளர் ஆண்டாள் தினேஷ், மாவட்ட மாணவர் அணி செயலாளர் டி.என்.பி.எல். சரவணன் உள்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.