தெப்பத்தை பிரித்தபோது குளத்தில் தவறி விழுந்து தொழிலாளி சாவு
தெப்பத்தை பிரித்தபோது குளத்தில் தவறி விழுந்து தொழிலாளி சாவு
வலங்கைமான்
வலங்கைமான் மாரியம்மன் கோவிலில் தெப்பத்தை பிரித்தபோது குளத்தில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
மகாமாரியம்மன் கோவில் தெப்பத்திருவிழா
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் பிரசித்தி பெற்ற மகாமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை பாடைக் காவடி திருவிழா மற்றும் ஆவணி கடைசி ஞாயிறு தெப்ப திருவிழா நடைபெறுவது வழக்கம்.
கடந்த 2 ஆண்டுகளாக ெகாரோனா பரவல் காரணமாக தெப்பத்திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டுக்கான தெப்பத்திருவிழா நேற்று முன்தினம் ஆவணி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
தெப்பத்தை பிரிக்கும் பணி
இதற்கான தொழிலாளர்களை வைத்து ஒப்பந்ததாரர் மூலம் கோவில் அருகில் உள்ள குளத்தில் தெப்பம் அமைக்கப்பட்டது. நேற்று முன்தினம் லங்காரம் செய்யப்பட்ட தெப்பத்தில் மகாமாரியம்மன் எழுந்தருளி குளத்தை மூன்று முறை சுற்றி வலம் வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தெப்பத்திருவிழா முடிந்ததும் தெப்பத்தை பிரிக்கும் பணியில் 4 தொழிலாளிகள் ஈடுபட்டனர். இதில் 3 பேர் மதியம் சாப்பிடுவதற்காக சென்று விட்டனர். ஒருவர் மட்டும் மாயமானார்.
குளத்தில் தவறி விழுந்து சாவு
இதுகுறித்து சக தொழிலாளிகள் உடனடியாக வலங்கைமான் போலீஸ் நிலையம் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் வலங்கைமான் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அங்கு விரைந்து வந்து குளத்தில் இறங்கி தொழிலாளியை தேடினர். அப்போது குளத்தில் இறந்த நிலையில் கிடந்த தொழிலாளியின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காவேரிக்கரை தெருவை சேர்ந்த சந்திரமோகன்(வயது 50) என்பது தெரிய வந்தது.
சோகம்
இதுகுறித்து சந்திரசேகரன் மனைவி சூர்யா கொடுத்த புகாரின் பேரில் வலங்கைமான் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரமோகன் உடலை கைப்பற்றி மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தெப்பத்தை பிரித்தபோது குளத்தில் மூழ்கி தொழிலாளி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.