வேளாங்கண்ணிக்கு சுற்றுலா சென்றபோது விபத்து ஆம்னி பஸ் கவிழ்ந்து 2 பேர் பலி


வேளாங்கண்ணிக்கு சுற்றுலா சென்றபோது விபத்து ஆம்னி பஸ் கவிழ்ந்து 2 பேர் பலி
x

ஒரத்தநாடு அருகே சாலையோரம் ஆம்னி பஸ் கவிழ்ந்து சிறுவன் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். 31 பேர் படுகாயம் அடைந்தனர்.

தஞ்சை,

கேரள மாநிலம் திருச்சூர் பகுதியைச் சேர்ந்த 51 பேர் நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு சுற்றுலாவாக ஒரு ஆம்னி பஸ்சில் புறப்பட்டு வந்தனர். நேற்று அதிகாலை தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு-மன்னார்குடி சாலையில் ஒக்கநாடு கீழையூர் கொல்லங்கோவில் ஆர்ச் அருகே பஸ் சென்ற போது திடீரென பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்தது.

உடனே பஸ்சில் இருந்தவர்கள் அலறி கூச்சலிட்டனர். இது குறித்து தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் சம்பவ இடத்துக்கு திரண்டு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் உடனடியாக பொக்லைன் எந்திரத்தை கொண்டு பஸ்சை நிமிர்த்தி பஸ்சுக்கு அடியில் சிக்கி இருந்தவர்களை மீட்டனர். மேலும் மன்னார்குடி தீயணைப்பு நிலைய வீரா்கள் மற்றும் ஒரத்தநாடு போலீசாரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

2 பேர் பலி

இந்த விபத்தில் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த ஜிம்மி ஜார்ஜ் மகன் ஜெரால்டுஜிம்மி (வயது 9), புலிக்கான்வர்கீஸ் மனைவி லில்லி (60) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

மேலும் 31 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் மன்னார்குடி, திருவாரூர், தஞ்சை அரசு ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

பஸ்சுக்குள் இருந்து அலறித்துடித்த மக்கள்

முன்னதாக ஆம்னி பஸ் கவிழ்ந்த போது அதிகாலை பயங்கர சத்தம் கேட்டது. இதனால் அருகில் வசித்த மக்கள் அதிர்ச்சி அடைந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

அப்போது பஸ்சுக்குள் சிக்கி காயம் அடைந்தவர்கள் அலறி துடித்தது அனைவரையும் கலங்க செய்தது.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விரைவாக சம்பவ இடத்துக்கு சென்ற இளைஞர்கள் முழுவீச்சில் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் சம்பவ இடத்தில் ஏராளமான மக்கள் திரண்டனர்.

குறிப்பாக பொக்லைன் எந்திரத்தை விரைவாக சம்பவ இடத்துக்கு வரவழைத்து கவிழ்ந்து கிடந்த பஸ்சை நகர்த்தி காயம் அடைந்தவர்களை மீட்டனர். மேலும் மீ்ட்கப்பட்டவர்களை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பிவைத்தனர்.

குறிப்பாக சமூக வலைத்தளங்கள் மூலம் தகவல்களை பரிமாறி சக இளைஞர்களை ஒருங்கிணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.


Related Tags :
Next Story