கோத்தகிரியில் மரத்துண்டுகளை ஏற்றி வந்த போது மண்ணில் சக்கரங்கள் புதைந்து லாரி சரிந்தது-முதியோர் இல்லத்தில் மரத்துண்டுகள் உருண்டு விழுந்ததால் பரபரப்பு


கோத்தகிரியில் மரத்துண்டுகளை ஏற்றி வந்த போது மண்ணில் சக்கரங்கள் புதைந்து லாரி சரிந்தது-முதியோர் இல்லத்தில் மரத்துண்டுகள் உருண்டு விழுந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 7 Jun 2023 1:00 AM IST (Updated: 7 Jun 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி அருகே அதிக பாரத்துடன் மரத்துண்டுகளை ஏற்றி வந்த லாரியின் சக்கரங்கள் மண்ணில் புதைந்து சரிந்ததால், மரத்துண்டுகள் அருகிலிருந்த முதியோர் இல்ல வளாகத்திற்குள் உருண்டு சென்று விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி அருகே அதிக பாரத்துடன் மரத்துண்டுகளை ஏற்றி வந்த லாரியின் சக்கரங்கள் மண்ணில் புதைந்து சரிந்ததால், மரத்துண்டுகள் அருகிலிருந்த முதியோர் இல்ல வளாகத்திற்குள் உருண்டு சென்று விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சரிந்து நின்ற லாரி

கோத்தகிரி குமரன் காலனியை சேர்ந்த குமரேசன் என்பவருக்கு சொந்தமான லாரியில் சில்வர் ஓக் மரத்துண்டுகளை ஏற்றியவாறு நேற்று அதிகாலை 3 மணிக்கு கோத்தகிரி மிஷன் காம்பவுண்ட் பகுதியில் இருந்து ராம் சந்த் நோக்கி வந்து கொண்டிருந்தது. லாரியை கீழ்கோத்தகிரியைச் சேர்ந்த டிரைவர் சுப்பிரமணி ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது ஒரு சக்கரம் பஞ்சராகி விட்டதாக கூறப்படுகிறது. எனவே அவர் சாலையின் ஓரத்தில் லாரியை நிறுத்த முயற்சி செய்துள்ளார். லாரியில் கூடுதல் பாரம் இருந்ததால் லாரியின் சக்கரங்கள் மண்ணில் புதைந்து, லாரி பக்கவாட்டில் இருந்த தகர தடுப்பில் சரிந்து நின்றது. இதில் லாரியில் இருந்த மரத் துண்டுகளில் சில அருகிலிருந்த முதியோர் இல்ல வளாகத்தில் உருண்டு சென்று விழுந்தன. இதனால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது.

3 மணி நேரத்திற்கு பின் மீட்பு

இது குறித்து தகவல் அறிந்த ரோந்துப் பணி சப் -இன்ஸ்பெக்டர் மனோகரன், கோத்தகிரி சப் -இன்ஸ்பெக்டர் ரகுமான்கான், கோத்தகிரி தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் மாதன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் இரவு நேரத்தில் மீட்பு பணி மேற்கொண்டால் மரத்துண்டுகள் சரிந்து விழுந்து அசம்பாவிதங்கள் ஏற்படக் கூடும் என்பதால் காலை 6 மணிக்கு மீட்புப் பணியைத் தொடங்கினர். பொக்லைன் எந்திரம் மற்றும் கிரேன் கொண்டுவரப்பட்டு, மரத்துண்டுகளை லாரியில் இருந்து அப்புறப்படுத்தியப்பின், லாரியை அங்கிருந்து மீட்டனர்.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் மீட்புப் பணி நடைபெற்றதால் அவ்வழியாக மருத்துவமனை, பள்ளி உள்பட ஏராளமான குக்கிராமங்களுக்கு வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. அவ்வழியாக சென்ற வாகனங்கள் வேறு வழியாக இயக்கப்பட்டன.

நிறுத்தி வைப்பதை தடுக்க வேண்டும்

இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், மரங்களை ஏற்றி சமவெளி பகுதிகளுக்கு விற்பனைக்காக கொண்டுச் செல்லும் லாரிகள் அனைத்தும் இரவு நேரத்தில் இந்த சாலையில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. எனவே அவ்வப்போது விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. தற்போது விபத்து நடந்த இடத்திற்கு அருகே உள்ள முதியோர் இல்லத்தில் சுமார் 15 முதியோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். லாரி மரத்துண்டுகளுடன் சரிந்து விழாமல் இருந்ததால் பெரும் அசம்பாவிதங்கள் ஏற்படவிருந்தது தடுக்கப்பட்டது. எனவே இந்த சாலையில் வாகனங்கள் நிறுத்தி வைப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.


Next Story