கிரேன் மூலம் தேன்கூட்டை எடுக்க முயன்றபோது தவறி விழுந்த தனியார் நிறுவன ஊழியர் பலி-வாலிபர் படுகாயம்


கிரேன் மூலம் தேன்கூட்டை எடுக்க முயன்றபோது தவறி விழுந்த தனியார் நிறுவன ஊழியர் பலி-வாலிபர் படுகாயம்
x
தினத்தந்தி 21 Dec 2022 12:15 AM IST (Updated: 21 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கிரேன் மூலம் தேன்கூட்டை எடுக்க முயன்றபோது தவறி விழுந்த தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார். வாலிபர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

கிரேன் மூலம் தேன்கூட்டை எடுக்க முயன்றபோது தவறி விழுந்த தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார். வாலிபர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

தனியார் நிறுவன ஊழியர்

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள மைலேறி பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஏலூரை சேர்ந்தவர் கார்த்திக் குமார் (வயது 33). இவர் மைலேறிபாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு ரேவதி என்ற மனைவியும், ஆத்விக் (3) என்ற மகனும் உள்ளனர். இந்தநிலையில் கோவிந்தாபுரம் செல்லும் வழியில் நடராஜ் என்பவரின் தோட்டம் அருகே ரோட்டோரம் நின்ற புளியமரத்தில் தேன்கூடு இருந்தது. இதனை எடுக்க கார்த்திக்குமார் முடிவு செய்தார். அதன்படி கருப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (27) என்பவரின் உதவியுடன் கிரேன் மூலம் தேன்கூட்டை எடுக்க முயன்றனர்.

தவறி விழுந்தனர்

அப்போது கிரேனில் இரும்பு கூண்டை கயிறு கட்டி தொங்கவிட்டு அதில் கார்த்திக்குமார், ராமகிருஷ்ணன் ஆகியோர் இருந்தனர். கிரேனை மயிலாடுதுறை எழந்தன்குடி பகுதியைச் சேர்ந்த பிரவீன் குமார் (28) என்பவர் இயக்கினார். தேன்கூட்டின் அருகே கிரேன் சென்ற போது எதிர்பாராதவிதமாக கயிறு அறுந்து இரும்பு கூண்டு கீழே விழுந்தது. இதனால் கூண்டில் இருந்த 2 பேருக்கும் படுகாயம் ஏற்பட்டது. படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கார்த்திக்குமார் பரிதாபமாக இறந்து போனார். ராமகிருஷ்ணன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story