விபத்துகளை தடுக்க வேகத்தடைக்கு வெள்ளை 'பெயிண்ட்'


விபத்துகளை தடுக்க வேகத்தடைக்கு வெள்ளை பெயிண்ட்
x
தினத்தந்தி 10 Oct 2022 12:15 AM IST (Updated: 10 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணாபுரம் நால்ரோடு பகுதியில் விபத்துகளை தடுக்க வேகத்தடைக்கு வெள்ளை நிற ‘பெயிண்ட்’ அடித்த இளைஞர்களுக்கு பாராட்டு குவிகிறது.

கோயம்புத்தூர்

கருமத்தம்பட்டி

கிருஷ்ணாபுரம் நால்ரோடு பகுதியில் விபத்துகளை தடுக்க வேகத்தடைக்கு வெள்ளை நிற 'பெயிண்ட்' அடித்த இளைஞர்களுக்கு பாராட்டு குவிகிறது.

வேகத்தடை

திருப்பூர் மாவட்டம் காமநாயக்கன்பாளையமும், கோவை மாவட்டம் அன்னூரும் இணையும் மாநில நெடுஞ்சாலையில் சோமனூர் அருகே கிருஷ்ணாபுரம் பகுதி உள்ளது. ஜவுளி உற்பத்தி, விசைத்தறி தொழில் நிறைந்த பகுதியாக விளங்குவதால், இந்த சாலையில் வாகன போக்குவரத்து மிகுந்து காணப்படும். இங்கு நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தில், அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. இதை தடுக்கும் வகையில் மாநில நெடுஞ்சாலையின் இருபுறமும் வேகத்தடை அமைக்கப்பட்டது.

ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் ஒளிரும் பட்டைகள் பொருத்தவோ அல்லது வெள்ளை நிற பெயிண்ட் அடிக்கவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் கூறியும், எந்தவித பலனும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

பாராட்டு

இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி கீழே விழும் நிலை உள்ளது. அதுவும் இரவில் அவர்கள் படாத பாடு படுகின்றனர். விபத்துகளை தடுக்க அமைக்கப்பட்ட வேகத்தடைகளே மேலும் விபத்துகள் அதிகரிக்க காரணமாகிவிடும் நிலைக்கு சென்றுவிட்டன.

இதை உணர்ந்த அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் இணைந்து, மாநில நெடுஞ்சாலையின் இருபுறமும் உள்ள வேகத்தடைக்கு வெள்ளை நிற பெயிண்ட் அடித்தனர். அதன்பிறகே அந்த பகுதியில் விபத்துகள் குறைய தொடங்கி உள்ளது. இளைஞர்களின் இந்த செயலுக்கு, அனைத்து தரப்பினரும் தங்களது பாராட்டுகளை குவித்து வருகின்றனர்.

இதற்கிடையில் இளைஞர்கள் அடித்த அந்த பெயிண்ட் சாதாரணமானதுதான், அது விரைவில் அழிந்துவிடக்கூடும், எனவே விரைவில் அழியாத வகையில் பெயிண்ட் அடிக்க நெடுஞ்சாலைத்துறையினர் முன்வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story