கரும்பு பயிரில் வெள்ளை வேர்ப்புழு தாக்குதல்


கரும்பு பயிரில் வெள்ளை வேர்ப்புழு தாக்குதல்
x
தினத்தந்தி 10 Aug 2023 12:15 AM IST (Updated: 10 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சங்கராபுரம் அருகே கரும்பு பயிரில் வெள்ளை வேர்ப்புழு தாக்குதலால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்

10 மாத பயிர்

சங்கராபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இப்பகுதி விவசாயிகள் பெரும்பாலும் 10 மாதம் பயிரான கரும்பு பயிர்களை அதிக அளவில் பயிரிட்டு வருகின்றனர். அந்த வகையில் குளத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கரும்பு பயிரிட்டு பராமரித்து வருகின்றனர். அறுவடைக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன.

இந்த நிலையில் கரும்பு பயிரில் வெள்ளை வேர்ப்புழு தாக்குதல் அதிகரித்து காணப்படுகிறது. வெட்டும் நிலையில் உள்ள கரும்பு மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது. மேலும் வெள்ளை வேர் புழு தாக்குதலால் கரும்பின் வளர்ச்சியும் மிக குறைவாக காணப்படுவதோடு, இக்கரும்பினை தனியார் மற்றும் அரசு ஆலைக்கு எடுத்துக் கொள்வார்களா? என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர்.

இதுகுறித்து குளத்தூர் கிராமத்தை சேர்ந்த பாசன சங்க தலைவர் தங்கவேல் கூறியதாவது:-

ஆயிரம் ஏக்கர் பரப்பளவில்

இப்பகுதி மக்கள் விவசாயத்தையே நம்பி வாழ்ந்து வருகின்றனர். கரும்பு பயிரை அதிக அளவில் சாகுபடி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சங்கராபுரம் பகுதியில் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்தனர்.ஆனால் அறுவடை நேரம் நெருங்கி வரும் வேளையில் வெள்ளை வேர்புழு தாக்குதலால் கரும்பு பயிர் முழுவதும் காய்ந்த நிலையிலும், கரும்பு சோகை மஞ்சள் நிறத்திலும் காணப்படுகிறது. இதை கட்டுப்படுத்த பல்வேறு வகையான மருந்துகளை தெளித்தும் கட்டுப்படுத்த முடியவில்லை.

உடனடியாக வெட்ட வேண்டும்

எனவே இப்பகுதியில் உள்ள வேளாண்மை அலுவலகத்தை தொடர்பு கொண்டு உரிய ஆலோசனைகளை பெற்ற பின்னரும் வெள்ளை வேர்ப்புழு தாக்குதல் குறையவில்லை. பல ஆயிரம் செலவு செய்து சாகுபடி செய்து வந்த நிலையில், கரும்பு பயிர் வளர்ச்சி அடையாமல், கரும்பின் வேர் பகுதிகளை வெள்ளை வேர் புழு தாக்கியதால் கரும்பு காய்ந்து மஞ்சள் நிறமாக காணப்பட்டு பெரும் நஷ்டமடைந்து வருகிறோம். எனவே காலதாமதம் செய்யாமல் கரும்பை உடனடி யாக வெட்டி கரும்பு ஆலைக்கு அனுப்ப அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story