ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் யார்? "ஆலோசனை நாளையும் தொடரும்" - தினேஷ் குண்டுராவ்


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் யார்? ஆலோசனை நாளையும் தொடரும் - தினேஷ் குண்டுராவ்
x

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் யார் என்பது குறித்த ஆலோசனை நாளையும் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27-ம் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 31-ம் தேதி தொடங்குகிறது. தேர்தலில் பதிவாகும் மார்ச் 2ம் தேதி எண்ணப்படுகிறது. இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட உள்ளது. காங்கிரஸ் தலைவர்கள் கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் வேட்பாளரை தேர்வு செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் தலைமையில் இன்று இரவு நடைபெற்றது. கூட்டத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது குறித்தும், வெற்றி வாய்ப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தினேஷ் குண்டு ராவ், "அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவுறுத்தலின் பேரின் இன்று சென்னை வந்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் தேர்வு குறித்து ஆலோசித்தேன். நாளை மூத்த தலைவர்களுடன் மீண்டும் ஆலோசனை நடைபெற இருக்கிறது. அகில இந்திய காங்கிரஸ் தலைமை வேட்பாளர் தேர்வை இறுதி செய்து அறிவிக்கும். மீண்டும் அந்த தொகுதியை காங்கிரசுக்கு தந்த திமுக தலைவர் மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு நன்றி" என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசர், தங்கபாலு, சட்டமன்ற உறுப்பினர் அசன்மவுலானா மற்றும் கட்சியின் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதனிடையே ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளரை நிறுத்த திட்டமிட்டுள்ளது. அதேவேளை, இடைத்தேர்தலில் அதிமுக தரப்பில் நாங்கள் போட்டியிடுவோம் என்றும், ஒருவேளை தேர்தலில் பாஜக போட்டியிட்டால் ஆதரவு தருவோம் என்றும் ஓ.பன்னீர் செல்வம் இன்று காலை கூறியிருந்தார்.


Next Story