கேன்களில் 300 கிலோ போதைபொருளை சென்னையில் இருந்து அனுப்பியது யார்?


கேன்களில் 300 கிலோ போதைபொருளை சென்னையில் இருந்து அனுப்பியது யார்?
x
தினத்தந்தி 30 Nov 2022 12:15 AM IST (Updated: 30 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தண்ணீர் கேன்களில் 300 கிலோ போதைபொருளை நிரப்பி சென்னையில் இருந்து அனுப்பியது யார்? என கைதான அண்ணன்-தம்பியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ராமநாதபுரம்

மண்டபம்,

தண்ணீர் கேன்களில் 300 கிலோ போதைபொருளை நிரப்பி சென்னையில் இருந்து அனுப்பியது யார்? என கைதான அண்ணன்-தம்பியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

300 கிலோ போதை பொருள்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள வேதாளை கடற்கரை சாலையில் கடலோர போலீசார் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். வீடுகளுக்கு வினியோகிக்கும் தண்ணீர் கேன்களில் வெள்ளை நிற பவுடர் நிரப்பப்பட்டு இருந்தது. அந்த பவுடரை எடுத்து சோதித்து பார்த்த போது அது போதை பொருள் என தெரிந்ததும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். 30 கேன்களில் இருந்த சுமார் 300 கிலோ எடை கொண்ட பவுடர் போன்ற போதை பொருளை பறிமுதல் செய்தனர். விசாரணையில் கடல் வழியாக படகில் இலங்கைக்கு கடத்தி செல்வதற்காக காரில் போதை பொருளை எடுத்து வந்தது ெதரிய வந்தது. பிடிபட்ட போதை பொருள் கொக்கேனாக இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்

அண்ணன்-தம்பி கைது

இது தொடர்பாக காரில் வந்த கீழக்கரையைச் சேர்ந்த நகராட்சி முன்னாள் துணைத்தலைவரும், நகர தி.மு.க. துணை செயலாளருமான ஜெயினுதீன் (வயது 45), அவரது தம்பியான தி.மு.க. கவுன்சிலர் சார்பாஸ்நவாஷ் (42) ஆகிய 2 பேரை கைது செய்தனர். பிடிபட்ட 2 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில், அந்த பவுடர் சென்னையில் இருந்து தனியார் பார்சல் வாகனம் மூலம் கீழக்கரைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அங்கிருந்து வேதாளை பகுதியை சேர்ந்த ஒருவரிடம் கொடுப்பதற்காக காரில் எடுத்து வந்தபோது போலீசாரிடம் சிக்கிக்கொண்டது தெரிய வந்தது.

கைப்பற்றப்பட்ட பவுடர் போன்ற போதை பொருள் சென்னையில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக போலீசார் கூறும் போது, 300 கிலோ போதை பொருள் விவகாரத்தில் கைதான 2 பேரிடமும் இந்த கடத்தலுக்கு பின்னணியில் யார்? சென்னையில் இருந்து அனுப்பியவர்கள் யார்? என்பதை அறிய தீவிரமாக விசாரித்து வருகிறோம். இதில் தொடர்புடைய வேதாளை பகுதியை சேர்ந்தவரை பிடிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். கைதான 2 பேரிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது, என்றனர்.


Related Tags :
Next Story