'யார் தவறு செய்தாலும் தி.மு.க. அரசு விடாது' அமைச்சர் எ.வ.வேலு பேட்டி


யார் தவறு செய்தாலும் தி.மு.க. அரசு விடாது அமைச்சர் எ.வ.வேலு பேட்டி
x

கனியாமூர் கலவரத்தில் சூறையாடப்பட்ட பள்ளியில் 3 அமைச்சர்கள் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது யார் தவறு செய்தாலும் அவர்களை தி.மு.க. அரசு விடாது என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் நேற்று முன்தினம் நடந்த கலவரத்தில் சேதமான சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், நேற்று தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன், பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

கலவரத்தில் காயமடைந்து கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் போலீஸ்காரர்களை அமைச்சர்கள் சந்தித்து ஆறுதல் கூறினர்.

விஷமிகள்

பின்னர் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது:-

கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் விரும்பத்தகாத சம்பவம் நிகழ்ந்துவிட்டது. சமூக வலைத்தளம் என்ற பெயரில் பல தொடர்புகளை ஏற்படுத்தி மக்களுக்கு தொல்லை தருகிற வகையில் பல்வேறு தவறான செய்திகளை வெளியிட்டு, மாணவர்கள் என்ற பெயரில் ஆர்ப்பாட்டத்தை ஏற்படுத்தி உள்ளனர்.

பள்ளிக்குள் நுழைந்து பள்ளிக்கு சொந்தமான 37 பஸ்கள், கார்கள், டிராக்டர்கள், பொக்லைன் என்று 67 வாகனங்களையும், பாதுகாப்பு பணிக்கு வந்த போலீசாரின் 2 பஸ்கள், 48 மோட்டார் சைக்கிள்களையும் தீ வைத்து கொளுத்தியுள்ளனர். இவர்கள் மாணவர்கள் என்ற பெயரில் வந்த விஷமிகள். அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளனர்.

தண்டனை பெற்று தரப்படும்

உயர்நீதிமன்ற உத்தரவுபடி, 4 டாக்டர்கள் நியமனம் செய்யப்பட்டு, நாளைய தினம்( அதாவது இன்று) மாணவி, ஸ்ரீமதியின் உடல் மறு உடற்கூறாய்வு செய்யப்பட உள்ளது.

அந்த பரிசோதனை முடிவு கிடைத்தபிறகு, யார் தவறு செய்து இருந்தாலும் அவர்கள் நீதிமன்றம் முன்பு நிறுத்தப்பட்டு தண்டனை பெற்று தரப்படும். இதில், யார் தவறு செய்தாலும் அவர்களை இந்த தி.மு.க. அரசாங்கம் விடாது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story