'யார் தவறு செய்தாலும் அவர்களை தி.மு.க. அரசு விடாது'


யார் தவறு செய்தாலும் அவர்களை தி.மு.க. அரசு விடாது
x

கனியாமூர் கலவரத்தில் சூறையாடப்பட்ட பள்ளியில் 3 அமைச்சர்கள் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது யார் தவறு செய்தாலும் அவர்களை தி.மு.க. அரசு விடாது என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் நேற்று முன்தினம் நடந்த கலவரத்தில் சேதமான சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், நேற்று தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன், பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ஆய்வின் போது அமைச்சர்களை, அப்பள்ளியில் படித்து வரும் மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர் 50-க்கும் மேற்பட்டவர்கள் சூழ்ந்து கொண்டு, தங்களது பிள்ளைகளுக்கு கல்விகட்டணத்தை செலுத்திவிட்டோம். எனவே வேறு பள்ளிக்கு செல்ல இயலாது. ஆகையால், பள்ளியை சீரமைத்து மாணவர்கள் கல்வி கற்க நடவடிக்கை எடுப்பதுடன், அதுவரை ஆன்லைன் வகுப்பு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர்கள் தெரிவித்தனர்.

அதை தொடர்ந்து, கலவரத்தில் காயமடைந்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போலீஸ்காரர்களை அமைச்சர்கள் சந்தித்து ஆறுதல் கூறினர்.

பல மாவட்டங்களில் இருந்து சூழ்ந்தனர்

பின்னர் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த 13-ந்தேதி கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் விரும்பத்தகாத ஒரு சம்பவம் நிகழ்ந்துவிட்டது. அதன் பின்னர் 4 நாட்கள் சிறுசிறு போராட்டங்கள் நடந்துள்ளது.

அப்போது, மாவட்ட நி்ாவாகமும், காவல்துறையினரும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பாதுகாப்பு அளித்து, நடவடிக்கை எடுத்து வந்தனர். கடந்த 17-ந்தேதி சமூக வலைத்தளம் என்ற பெயரில் பல தொடர்புகளை ஏற்படுத்தி மக்களுக்கு தொல்லை தருகிற வகையில் பல்வேறு தவறான செய்திகளை வெளியிட்டு, மாணவர்கள் என்ற பெயரில் ஆர்ப்பாட்டத்தை ஏற்படுத்தி உள்ளனர். பல மாவட்டங்களில் இருந்தும் இப்பகுதியில் சூழ்ந்து தவறான செயலில் ஈடுபட்டுள்ளனர்.

மாணவர்கள் பெயரில் வந்த விஷமிகள்

ஜனநாயக ரீதியாக போராட்டம் நடத்துவதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அவ்வாறு இல்லாமல் 3200 மாணவர்கள் படிக்கும் பள்ளிக்குள் நுழைந்து பள்ளிக்கு சொந்தமான 37 பஸ்கள், கார்கள், டிராக்டர்கள், பொக்லைன் என்று 67 வாகனங்களையும், பாதுகாப்பு பணிக்கு வந்த போலீசாரின் 2 பஸ்கள், 48 மோட்டார் சைக்கிள்களையும் தீ வைத்து கொளுத்தியுள்ளனர். நியாயம் கேட்பவர்கள் நியாயத்தை மட்டும் தான் கேட்க வேண்டும்.

மாணவர்களின் சான்றிதழ்களை தீ வைத்து கொளுத்த என்ன அவசியம் உள்ளது? நியாயம் கேட்க போராடியர்கள் இதுபோன்று செய்வார்களா? இவர்கள் மாணவர்கள் என்ற பெயரில் வந்துள்ள சில விஷமிகள், விரும்பத்தகாதவர்கள், அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் ஈடுபட்டுள்ளனர்.

தண்டனை பெற்று தரப்படும்

பள்ளி மாணவர்களையும், அந்த பகுதி மக்களையும், சட்டம் -ஒழுங்கை காப்பற்ற வேண்டும் என்கிற அடிப்படையில் காவல்துறையினர் சிறப்பாக செய்பட்டுள்ளனர்.

உயர்நீதிமன்ற உத்தரவுபடி, 4 டாக்டர்கள் நியமனம் செய்யப்பட்டு, நாளைய தினம் ( அதாவது இன்று) மாணவி, ஸ்ரீமதியின் உடல் மறு உடற்கூறாய்வு செய்யப்பட உள்ளது.

அந்த பரிசோதனை முடிவு கிடைத்தபிறகு, யார் தவறு செய்து இருந்தாலும் அவர்கள் நீதிமன்றம் முன்பு நிறுத்தப்பட்டு தண்டனை பெற்று தரப்படும். இதில், யார் தவறு செய்தாலும் அவர்களை இந்த தி.மு.க. அரசாங்கம் விடாது.

எந்த அரசியல் கட்சியினர்

20-க்கும் மேற்பட்ட பள்ளி தாளாளர்கள் எங்களிடம் மனு அளித்துள்னர். அதில் பள்ளியை சீரமைத்து, பஸ்களை வாங்குவது என்பது சால சிறந்தது அல்ல. எனவே மாணவர்களின் கல்விநலனை கருதி, எங்களது அறக்கட்டளை சார்பில் 50 பஸ்கள், பள்ளிக்கு தளவாட பொருட்களையும் வாங்கி தருகிறோம் முதல்- அமைச்சாிடம் அனுமதி பெற்று தாருங்கள் என்று தெரிவித்துள்ளனர். இதை அவரின் கவனத்துக்கு கொண்டு செல்வோம்.

பெரியளவில் எந்த சம்பவமும் நடக்காமல் 13 பேரை சுட்டு வீிழ்த்தியவர்கள் தான் அ.தி.மு.க.வினர். உளவுத்துறை சரியாக பணி செய்ததால் தான், பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் உரிய பாதுகாப்பை போலீசார் அளித்தனர். போராட்டத்தில் பங்கேற்றவர்கள் எந்த மாதிரியான அமைப்பினர், எந்த அரசியல் கட்சியினர் அவர்களை தூண்டி விட்டுள்ளனர் என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது கலெக்டர் ஸ்ரீதர், ஏ.டிஜி.பி. தாமரைக்கண்ணன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வக்குமார், எம்.எல்.ஏ.க்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன், மணிகண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story