தெருவிளக்குகள் பயன்பாட்டிற்கு வராதது ஏன்?

எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியிலான தெரு மின்விளக்குகள் பயன்பாட்டிற்கு வராதது ஏன்? என நகரசபை கூட்டத்தில் காங்கிரஸ் கவுன்சிலர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியிலான தெரு மின்விளக்குகள் பயன்பாட்டிற்கு வராதது ஏன்? என நகரசபை கூட்டத்தில் காங்கிரஸ் கவுன்சிலர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
நகரசபை கூட்டம்
விருதுநகர் நகரசபையின் சாதாரண கூட்டம் நகர சபை தலைவர் மாதவன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் தனலட்சுமி, கமிஷனர் தட்சிணாமூர்த்தி, என்ஜினீயர் மணி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதும் காங்கிரஸ் கவுன்சிலர்கள் விருதுநகர் தொகுதி எம்.பி. மாணிக்கம் தாகூர் கடந்த 2019-ம் ஆண்டு நகராட்சி பகுதிக்கு ஒதுக்கீடு செய்த 55 மின்விளக்குகள் இன்னும் போடப்படாத நிலை உள்ளதால் அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நகர சபை தலைவர் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர்.
இதற்கு பதிலளித்த நகர சபை என்ஜினீயர் மணி நகராட்சி நிர்வாகம் மின்வாரியத்திற்கு ரூ 4.4 கோடி மின் கட்டண பாக்கி செலுத்த வேண்டிய நிலையில் மின்வாரிய நிர்வாகம் மின் விளக்குகளுக்கான விண்ணப்பத்தை ஏற்க மறுத்து விட்டதாக தெரிவித்தார். எனினும் இதுகுறித்து கலெக்டர் தலையீட்டின் பேரில் தற்போது மின்வாரியம் இந்த தெரு விளக்குகளுக்கு அனுமதி அளிப்பதாக தெரிவித்துள்ளதாக கூறினார்.
குடிநீர் பிரச்சினை
குடிநீர் பிரச்சினை குறித்து நீண்ட விவாதத்திற்கு பின்பு வாரத்திற்கு ஒரு நாள் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகரசபை தலைவர் மாதவன் உறுதி அளித்தார்.
விருதுநகர் நகராட்சி அலுவலகத்தில் என்ஜினீயரிங் பிரிவு முறையாக செயல்படவில்லை என்றும் அதனால் தான் டெண்டர் விடப்பட்ட பணிகள், நிர்வாக அனுமதி வழங்க வேண்டிய பணிகள் ஆகியவை குறித்து நகரசபை கூட்டத்தில் பொருள் வைக்கவில்லை என்று கவுன்சிலர் மதியழகன் புகார் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த என்ஜினீயர் மணி, என்ஜினீயரிங் பிரிவில் 3 பணியாளர்கள் மட்டும் உள்ளதாகவும் அவர்களும் தற்போது தான் பணியில் சேர்ந்துள்ளதாகவும் அதனால் தான் பணி தாமதமாகும் நிலை உள்ளது என கூறினார். இதனை கவுன்சிலர்கள் ஏற்க மறுத்தனர். எனினும் கமிஷனர் தட்சிணாமூர்த்தி தலையிட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.






