கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் மத்திய உளவுப்பிரிவு கண்காணிக்க தவறியது ஏன்?-துரை வைகோ கேள்வி
கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் மத்திய உளவுப்பிரிவு கண்காணிக்க தவறியது ஏன்? என துரை வைகோ கேள்வி எழுப்பினார்.
ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ புதுக்கோட்டையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கோவையில் கார் வெடித்து சிதறி பலியானவர் கடந்த 2 ஆண்டுகளாக என்.ஐ.ஏ.வின் தொடர் கண்காணிப்பில் இருந்தவர். அப்படி இருந்த காலத்தில் அவர் ஆன்லைனில் கொஞ்சம் கொஞ்சமாக வெடிப் பொருட்களை வாங்கி சேமித்துள்ளார். ஆனால் பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தமிழக அரசை குற்றம் சொல்லி அரசியலாக்குகிறார். இந்த சம்பவத்தில் மத்திய உளவுப்பிரிவு கண்காணிக்க தவறியது ஏன்? கடந்த 2 ஆண்டுகளில் யார் ஆட்சி நடந்தது என்பதை அண்ணாமலை தெரிந்து கொள்ள வேண்டும். பொள்ளாச்சி சம்பவம் உள்பட பல்வேறு சம்பவங்களில் அழுத்தம் காரணமாக தான் கடந்த ஆட்சியில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருந்தது.
கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் சம்பந்தப்பட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் வெளிநாட்டு சதி இருக்குமோ? என்பதை அறிய தான் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், என்.ஐ.ஏ. விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளார். இந்தநிலையில் பா.ஜனதா சார்பில் வருகிற 31-ந் தேதி நடைபெறும் பந்த் தேவையற்றது. இதை வைத்து பா.ஜனதா மலிவான அரசியலை செய்து வருகிறது.
இந்தி படிப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை. இந்தி படித்தால் தான் அரசு வேலை கிடைக்கும் என்று இந்தியை திணிப்பதை தான் நாங்கள் எதிர்க்கிறோம். ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையை பொறுத்தவரை 4 நபர்களை விசாரணை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது. அந்த விசாரணை நிறைவடைந்து ஆணையம் கூறியுள்ள 4 பேரையும் குற்றவாளிகள் என்று முடிவு செய்தால் மட்டுமே இது குறித்து கருத்து கூற முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.