இன்றைய இளைஞர்களிடம் விவாகரத்து முடிவு அதிகரித்து இருப்பது ஏன்? - சட்டநிபுணர், பொதுமக்கள் கருத்து
இன்றைய இளைஞர்களிடம் விவாகரத்து முடிவு அதிகரித்து இருப்பது ஏன்? என்பது குறித்து சட்டநிபுணர், பொதுமக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
இன்றைய அவசர உலகில் குடும்ப வாழ்க்கையில் இருக்கும் இளம் தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமலும், விட்டு கொடுத்து வாழத் தெரியாமலும், சிறிய விஷயங்களுக்கு எல்லாம் கோபப்பட்டு, சண்டை போட்டுக் கொண்டு விவாகரத்து வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிலும் குறிப்பாக 30 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிகம் இந்த முடிவை எடுக்கின்றனர்.
சாதி, மதம், இனம் என்று வேறுபாடு இல்லாமல் அனைத்து தரப்பினரும் விவாகரத்தை தேடிச்செல்கின்றனர்.
சகிப்பு தன்மையும், புரிதலும் இல்லாததே இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
கணவன்-மனைவி இருவருக்கும் விவாகரத்து பெறுவதற்கான சம உரிமை இருந்தாலும், விவாகரத்து கோருவதற்கு சில காரணங்கள் சட்டரீதியாக இருக்கின்றன என்று சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர். அதுபற்றிய விவரத்தைக் காண்போம்.
மனரீதியாக துன்புறுத்துவது
ஐகோர்ட்டு வக்கீல் தேவி நட்ராஜ்:- ஒரு துணையை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்துவது, பொது வெளியில் அவர்களின் நற்பெயருக்கு தீங்கு விளைவிப்பது போன்றவை கொடூர செயல்களாக கருதப்படுகின்றன. அதேபோல், பொதுவெளியில் தங்கள் துணையின் குணத்தை அவமானப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை.
ஒரு பெண் தன் கணவனை விவாகரத்து செய்யும் முடிவுக்கு வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. திருமணத்திற்குப் பிறகும் ஆண்கள் மற்ற பெண்களுடன் தொடர்பில் இருந்தால், அது தெரிய வரும்போது பெண்கள் விவாகரத்து முடிவுக்கு வருகிறார்கள். குறிப்பாக தன் கணவர் குணத்தை சந்தேகிப்பது, அலுவலகத்திற்குச் செல்வது, அவர்களுடன் சண்டை போடுவது, சக ஊழியர்களுடன் பாலியல் உறவு வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டுவது ஆகியவை இந்து திருமண சட்டப் பிரிவின் கீழ் வருவதால் இத்தம்பதிக்கு விவாகரத்து வழங்கப்படுகிறது. ஆனால் இப்படியே போகாமல் வாழ்க்கையில் ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து வாழ்வதன் மூலம் குடும்ப உறவை மேம்படுத்த முடியும்.
எந்திரத்தனமான வாழ்க்கை
வக்கீல் ஜோதிமுருகன்:- இளம் வயதில் திருமணம் செய்த தம்பதியர்கள் இடையே புரிதல் தன்மை இல்லை. ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லை. கணவன், மனைவி இருவரும் வேலை பார்ப்பதால் அவர்களது வாழ்க்கை எந்திரமயமான வாழ்க்கையாகி விட்டது. இதில் கூட்டு குடும்பமாக இருப்பதும் கஷ்டமாக தெரிகிறது. தற்போது கணவன்-மனைவி சண்டையில் மூக்கை நுழைக்க யாரும் முன்வருவது இல்லை. இதனால் சாதாரண விஷயங்களில் கூட கடைசியில் மனமுறிவு ஏற்பட்டு விவாகரத்து கேட்டு நீதிமன்றம் செல்கின்றனர். குடும்ப பிரச்சினைகளை மனம் விட்டு பேசிக்கொள்ளும் தன்மை இல்லாததாலும் குடும்பங்கள் சிதைந்து விடுகின்றன. மூன்றாம் நபர்களிடம் குடும்ப விஷயங்களை, விருப்பங்களை பகிர்ந்து கொள்வதாலும் கணவன், மனைவி இடையே விரிசல் ஏற்பட்டு, சந்தேகம் வலுத்து விவாகரத்தில் முடிகிறது. எனவே, பிறரிடம் குடும்ப உறவுகளை பற்றி வெளிப்படுத்துவதை இருபாலரும் தவிர்க்க வேண்டும்.
தற்போது ஆடம்பர மோகம், பெருநகர கலாசாரமும் விவாகரத்துக்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது. குடிப்பழக்கம், மனைவி, குழந்தைகளை கவனிக்காதது, புறக்கணிப்பு போன்றவையும் விவாகரத்து அதிகரிக்க காரணமாகிறது. காதல் திருமணம் புரிந்தவர்கள் அதிகம் விவாகரத்து பெறுவதற்கு காரணம், காதலிக்கும்போது அந்த பெண் கேட்கும் அனைத்தையும் காதலன் கடன் பெற்றாவது வாங்கி கொடுக்கிறார். மேலும் அவள் சொல்லும் நேரத்துக்கு சரியாக வந்து விடுகிறார். ஆனால் திருமணம் ஆன பிறகு அவளது தேவையை அவரால் பூர்த்தி செய்ய முடிவது இல்லை. மேலும் குறிப்பிட்ட நேரத்துக்கும் வீட்டுக்கு வர இயலுவது இல்லை. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்படுகிறது. கணவன்-மனைவி இருவரும் மனம் விட்டு பேசினால் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணலாம். திருமணமான புதிதில் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளுதல் வேண்டும். விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இருந்தால் பிரச்சினை ஏற்படாது.
சிறிய பிரச்சினைக்கும் விவாகரத்து
மக்கள்நீதிமன்ற உறுப்பினர் கோமதிநாயகம்:- முன்பு பெண்கள் அதிகம் படிப்பது இல்லை. வேலைக்கு செல்லவில்லை. கணவன் உழைப்பை நம்பி இருந்தனர். மேலும் கணவன் மற்றும் அவரது குடும்பத்தார் மீது அன்பு அதிகமாக இருந்தது. அதிக குழந்தைகள் பெற்றனர். கூட்டுக் குடும்பமாக வசித்தனர். குடும்பத்தில் ஒற்றுமை இருந்தது. ஒருவர் பேச்சை ஒருவர் கேட்டு நடந்து கொண்டனர். கணவன் பேச்சை மனைவி கேட்டு நடந்து கொண்டார். தற்போது பெண்கள் கல்வி கற்று வேலைக்கு செல்கிறார்கள். இதனால் சிறிய பிரச்சினைக்கு கூட கணவன், மனைவி இடையே தகராறு ஏற்படுகிறது. அது விவாகரத்து வரை சென்று விடுகிறது. இதற்கு புரிதலும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லாததுமே காரணம்.
கணவன்-மனைவி இடையே சச்சரவை குறைப்பதற்காக மக்கள் நீதிமன்றத்தில் சமரச மையம் மற்றும் கலந்தாய்வு மையம் நடத்தப்படுகிறது. இதில் தம்பதியர் இருவருக்கும் தனித்தனியாக கவுன்சிலிங் வழங்கப்படுகிறது. அதில் பிரச்சினைகளை எப்படி சமாளித்து சந்தோஷமாக வாழ வேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்கி, இருவரையும் சேர்த்து வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.
திருமணம் புனிதமானது
நெல்லையை சேர்ந்த மூத்த வக்கீல் டி.ஏ.பிரபாகர்:- பெண்கள் கல்வி, பொருளாதாரத்தில் மேம்பட்டதால் தற்சார்பு நிலையை அடைந்து விட்டனர். பெண் குழந்தைகளை பெற்றோர் சீராட்டுகின்றனர். இதையே கணவரிடமும் எதிர்பார்க்கும்போது, தகராறு வருகிறது. அதேபோல் இளைஞனின் எதிர்பார்ப்பு பொய்த்து போகும்போது பிரச்சினை எழுகிறது. ஆண், பெண் தங்களது இணையின் நல்ல குணத்தை மட்டுமே பார்க்க வேண்டும்.
டி.வி. சீரியல்கள் குடும்பங்களை கெடுப்பதாகவே உள்ளது. திருமணம் புனிதமானது, இறைவன் இணைத்ததை மனிதன் பிரிக்கக்கூடாது என்பார்கள். விவாகரத்து கேட்டு வரும் தம்பதிகள் பிரிந்து விடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் கோர்ட்டு முதலில் கவுன்சிலிங் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யும். முடியாத பட்சத்தில்தான் விவாகரத்து வழங்கப்படுகிறது. தற்போது கணவன்-மனைவி இருவருமே நேரடியாக பிரிந்து விடுவதாக முடிவு எடுத்து பிரிவது அதிகமாகி வருகிறது.
மனம் விட்டு பேச வேண்டும்
சமூக நலத்துறை முதியோர் ஹெல்ப்லைன் கள பொறுப்பு அலுவலர் அமுதா:- குடும்ப பிரச்சினைகளில் பெண் தரப்பில், தன்னிடம் கணவன் குடும்பத்தார் வரதட்சணை கேட்பதாக முதல் குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள். அதுதொடர்பாக விசாரித்தால் பல்வேறு பிரச்சினைகள் தெரியவரும். இதுகுறித்து பல்வேறு கவுன்சிலிங் அளித்து வருகிறோம். கணவன்-மனைவி இடையே கோபத்தை குறைத்துக்கொண்டால் சண்டை ஏற்படாது. 2 பேரது வாழ்க்கையில் 3-வதாக பெண் அல்லது ஆண் வீட்டார் நுழைந்தால் பிரச்சினைதான். எனவே கணவன்-மனைவி சுயமாக முடிவுகளை எடுத்து வாழ்ந்தால் மகிழ்ச்சிதான். மனம் விட்டு பேசினால் மணமுறிவுகள் வராது.
சமூக நலத்துறையுடன் இணைந்து செயல்படும் குடும்ப நல ஆலோசகர் மீனா முருகன்:- கலெக்டரிடம் அளிக்கப்படும் குடும்ப பிரச்சினை தொடர்பான மனுக்கள் சமூக நலத்துறை மூலம் தீர்வு காண கவுன்சிலிங் மேற்கொள்ளப்படும். மேலும் போலீஸ் நிலையங்களுக்கு வருகிற கணவன்-மனைவி பிரச்சினைகளுக்கும் சமூக நலத்துறை மூலம் உதவி வழங்கப்படும். நெல்லை பகுதியை பொறுத்தவரை மது பழக்கம் அதிக விவாகரத்துக்கு காரணமாக அமைகிறது. மேலும் கள்ளக்காதல், பாலியல் பிரச்சினைகளும் மணவாழ்வை முறித்து விடுகின்றன. கருத்து வேறுபாடு, மாமியார்-மருமகள் தகராறு போன்றவற்றை பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கண்டு விடுவோம். மற்ற பிரச்சினைகள் தொடர்ந்து குடும்ப வாழ்க்கையில் தலை தூக்கிக்கொண்டே தான் இருக்கிறது. இவற்றுக்கு தீர்வு காண கணவன்-மனைவி கருத்து வேறுபாடுகள் இன்றி வாழ வேண்டும்.
வயது வித்தியாசம்
தென்காசியை சேர்ந்த வக்கீல் இசக்கிராஜ்:- தற்போது இணையதளம், செல்போன் போன்ற வளர்ச்சியால் பலருடன் தொடர்பு கொள்ளக்கூடிய நிலை உருவாகிறது. அப்போது பழக்கம் ஏற்பட்டு மூன்றாவது ஒரு நபர் அந்த குடும்பத்தில் வரும்போது பிரச்சினை ஏற்பட்டு, இறுதியில் விவாகரத்தில் முடிகிறது. முந்தைய காலங்களில் கணவன், மனைவிக்கு இடையே குறைந்தபட்சம் 7 வயது வித்தியாசம் இருக்கும். தற்போது இருவருக்கும் ஒரே வயதில் திருமணம் நடக்கிறது. இதனால் எந்த விஷயம் என்றாலும் இருவரும் குரல் கொடுக்கிறார்கள். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இருந்தால் பிரச்சினை எழாது.
தென்காசி மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரி மனநல டாக்டர் நிர்மல்:- ஒரு திருமணம் நடைபெறும்போது புதிய உறவுகள் ஏற்படும். அதில் பிடிக்கும், பிடிக்காது என்பது ஒரு புறம் இருந்தாலும் எல்லோருடைய குணங்களையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலை இருவருக்கும் இருக்க வேண்டும். மேலும் இருவரது குடும்பத்தையும் தங்களது குடும்பமாக கருத வேண்டும். அவ்வாறு இருந்தால் குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.