சிகிச்சையில் இருந்தவர் வீடு திரும்பியபின்பும் வழக்கை வாபஸ் பெறாதது ஏன்? என கேள்வி- கணவர் மாயமானதாக வழக்கு தாக்கல் செய்த பெண்ணுக்கு ரூ.1½ லட்சம் அபராதம் -மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
கணவர் மாயமானதாக வழக்கு தாக்கல் செய்தவருக்கு ரூ.1½ லட்சம் அபராதம் விதித்ததுடன், சிகிச்சையில் இருந்தவர் வீடுதிரும்பிய பின்பும் வழக்கை வாபஸ் பெறாமல் கோர்ட்டின் நேரத்தை வீணடித்தது ஏன்? எனவும் மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.
கணவர் மாயமானதாக வழக்கு தாக்கல் செய்தவருக்கு ரூ.1½ லட்சம் அபராதம் விதித்ததுடன், சிகிச்சையில் இருந்தவர் வீடுதிரும்பிய பின்பும் வழக்கை வாபஸ் பெறாமல் கோர்ட்டின் நேரத்தை வீணடித்தது ஏன்? எனவும் மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.
கட்டிட உரிமையாளர் மிரட்டல்
மதுரை, வெள்ளியங்குன்றத்தைச் சேர்ந்த உஷா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
எனது கணவர் சவுடி (வயது 57). நாங்கள் கே.புதூர் பகுதியில் ஓட்டல் நடத்தி வந்தோம். இதற்காக கடந்த 2017-ம் ஆண்டு அங்குள்ள கட்டிடத்தை வாடகைக்கு எடுப்பது தொடர்பாக விவேக் என்பவருடன் ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி ரூ.10 லட்சம் முன்தொகையாகவும், ரூ.56 ஆயிரம் மாத வாடகையாகவும் செலுத்துவது என முடிவு செய்யப்பட்டது.
ஒப்பந்த பத்திரமும் பதிவானது. இந்தநிலையில் கடந்த ஆண்டு ஓட்டலை காலிசெய்யுமாறு விவேக் எங்களை மிரட்டினார். இது தொடர்பாக கீழ் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை வாபஸ் பெறுமாறு தொடர்ச்சியாக மிரட்டி வந்தார்.
கணவர் மாயம்
இதனால் அவர் மீது கடந்த மாதம் போலீசில் எனது கணவர் புகார் அளித்தார். இதுகுறித்த விசாரணைக்கு போலீஸ் நிலையம் சென்ற எனது கணவர் வீடு திரும்பவில்லை. அவர் மாயமானது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனது கணவரை மீட்டு ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, இதுகுறித்து பதில் அளிக்கும்படி போலீசாருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.
ரூ.1½ லட்சம் அபராதம்
இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், சுந்தர்மோகன் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, மனுதாரரின் கணவர் மாயமானதாக தெரிவித்தனர். ஆனால் அவர் ஆஸ்பத்திரி ஒன்றில் இருந்தது தெரியவந்தது. தற்போது அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டனர் என்றார்.
இதனையடுத்து நீதிபதிகள், மனுதாரரின் கணவரை வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்ட நிலையில் ஏன் இந்த வழக்கை வாபஸ் பெறவில்லை? என கேள்வி எழுப்பினர். முடிவில், கோர்ட்டின் நேரத்தை வீணடித்ததாக கூறி, மனுதாரருக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டனர்.