மேகதாது அணை விவகாரத்தில் முதல்-அமைச்சர் வேடிக்கை பார்ப்பது ஏன்? எடப்பாடி பழனிசாமி கண்டனம்


மேகதாது அணை விவகாரத்தில் முதல்-அமைச்சர் வேடிக்கை பார்ப்பது ஏன்? எடப்பாடி பழனிசாமி கண்டனம்
x

மேகதாது அணை விவகாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேடிக்கை பார்ப்பது ஏன்? என எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

சென்னை,

கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், மத்திய நீர்வளத் துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்துக்கு 20.6.2023 அன்று எழுதியுள்ள கடிதம் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. அக்கடிதத்தில், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு விரைவாக ஒப்புதல் அளிக்க வேண்டும். மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு இரட்டை வேடம் போடுகிறது. தமிழ் நாட்டில் இரண்டாம் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு குடிநீர் திட்டங்கள் சட்டவிரோதமாக செயல்படுத்தப்படுகிறது.

அத்திட்டங்களை நியாயப்படுத்தும் தமிழ்நாடு அரசு, மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு மட்டும் அனுமதி அளிக்காமல் எதிர்ப்பு தெரிவிக்கும் இரட்டை நிலையை எடுத்திருப்பதாக குற்றம் சாட்டியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி தமிழகத்திற்கு வரும் நீர் பிலிகுண்டுலுவில் அளவிடப்பட்டு, அதன்பிறகு ஒகேனக்கல்லுக்கு வரும் தமிழகத்தின் பங்கு நீரைக்கொண்டுதான் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, தமிழ் நாட்டில் இரண்டாம் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் சட்டவிரோதமாக செயல்படுத்தப்படுகிறது என்பதே அப்பட்டமான பொய்யாகும். தமிழகத்திற்கு வரும் நீரில், தமிழகம் செயல்படுத்தும் குடிநீர் திட்டங்களை குறை சொல்ல கர்நாடகத்திற்கு எந்த உரிமையும் கிடையாது.

பிரச்சினையை பெரிதுபடுத்துகிறார்

காவிரி மேலாண்மை ஆணையத்தில் மேகதாது குறித்து விவாதிக்கக்கூடாது என்று பிரதமருக்கு 4.9.2018 அன்று கடிதம் மூலமாகவும், 8.10.2018 அன்று நேரிலும் நான் வலியுறுத்தினேன். மேலும், மத்திய நீர்வளத்துறைக்கு 17.09.2018, 31.10.2018 ஆகிய தேதிகளில் கடிதங்கள் மூலமாக மேகதாது மீதான தமிழ் நாட்டின் வலுவான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேகதாது குறித்து பிரதமருக்கும், மத்திய மந்திரி நிதின் கட்காரிக்கும் 27.11.2018 அன்று நான் கடிதம் எழுதியுள்ளேன். எனது தலைமையிலான அ.தி.மு.க. அரசு தொடர்ந்து கடிதம் மற்றும் நேரிலும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் மசூத் ஹூசேன், தமிழகத்தின் ஒப்புதல் பெறாமல் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு அனுமதி வழங்க முடியாது என்றும், காவிரி ஆற்றுப் படுகைக்குள் மேகதாது வருவதால், ஆணையத்தின் தலையீடு நிச்சயம் இருக்கும் என்றும் உறுதி அளித்தார்.

அதைத்தொடர்ந்து சென்ற மே மாதம் வரை மேகதாது பிரச்சினை அமைதியாக இருந்தது. ஆனால், கர்நாடகாவில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததை தொடர்ந்து, மேகதாதுவின் குறுக்கே அணை கட்டியே தீருவோம் என்று துணை முதல்-மந்திரி சிவக்குமார் காவிரி பிரச்சினையை பெரிதுபடுத்தி வருகிறார்.

வன்மையாக கண்டிக்கிறேன்

தி.மு.க. ஆட்சி செய்யும் போதெல்லாம் தமிழகத்தின் உரிமைகளை விட்டுக் கொடுப்பது வாடிக்கை. கச்சத் தீவு, காவிரி என ஆரம்பித்தது இன்று வரை நீடிக்கிறது. மேகதாதுவில் அணை கட்டியே தீரப்படும் என்றும், அதற்காக 9 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், கர்நாடக காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் பரப்புரையில் தெரிவித்திருந்தது. அப்போதே காங்கிரஸ் கூட்டணியில் இருந்த விடியா தி.மு.க. அரசு அதை கண்டித்திருக்க வேண்டும். ஆனால், கர்நாடகத்தில் உள்ள தங்களின் குடும்பத் தொழில்கள் பாதிக்கப்படும் என்ற பயத்தில், மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் கை கட்டி, வாய் பொத்தி, பேசா மடந்தையாக வேடிக்கை பார்த்த விடியா தி.மு.க. அரசையும், சந்தர்ப்பவாத முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தமிழக மக்களின் நலனுக்கு விரோதமாக செயல்படும் கர்நாடக மாநில துணை முதல் மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக, தனது பெயரிலேயே கடும் கண்டனத்தைத் தெரிவிக்க வலியுறுத்துவதோடு, இப்பிரச்சினையில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். மேலும், தமிழகம் வறண்ட பாலைவனமாக மாறாமல் தடுக்க, அ.தி.மு.க. அனைத்துப் போராட்டங்களையும் முன்னெடுக்கும் என்று எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story