மாநில நிதிக்குழு மூலம் வரும் நிதி குறைவாக வருவது ஏன்?


மாநில நிதிக்குழு மூலம் வரும் நிதி குறைவாக வருவது ஏன்?
x
தினத்தந்தி 27 Sept 2023 12:15 AM IST (Updated: 27 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்திற்கு மட்டும் மாநில நிதிக்குழு மூலம் வரும் நிதி குறைவாக வருவது ஏன்? என ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர் கேள்வி எழுப்பினார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்திற்கு மட்டும் மாநில நிதிக்குழு மூலம் வரும் நிதி குறைவாக வருவது ஏன்? என ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர் கேள்வி எழுப்பினார்.

ஒன்றியக்குழு சாதாரண கூட்டம்

மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியக்குழு சாதாரண கூட்டம் அதன் தலைவர் காமாட்சி மூர்த்தி தலைமையில் நடந்தது. ஒன்றிய ஆணையர் அருண் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் உறுப்பினர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அதன் விவரம் வருமாறு:

காந்தி (தி.மு.க.): மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்திற்கு மட்டும் மாதந்தோறும் மாநில நிதிக்குழு மூலம் வரும் நிதி குறைவாக வருவது ஏன்? மற்ற ஒன்றியங்களில் பொதுநிதி இருக்கிறது என்கிறார்கள். ஆனால் மயிலாடுதுறை ஒன்றியத்திற்கு மட்டும் பொதுநிதி குறைவாக வருகிறது, பொதுநிதியில் கவுன்சிலர்களுக்கு பணி கொடுத்து ஓராண்டிற்கு மேலாகிறது. மற்ற நிர்வாக செலவுகளுக்கும், பொதுநிதியில் இருந்து பணம் எடுப்பதால் கவுன்சிலர்கள் தங்கள் வார்டு பகுதிகளில் வளர்ச்சி பணிகள் செய்யாததால் தலைகாட்ட முடியவில்லை.

சாலை அமைக்க டெண்டர்

சந்தோஷ்குமார்(அ.தி.மு.க.): மயிலாடுதுறை ஒன்றியத்திற்கு மக்கள் தொகை அடிப்படையில் மாதத்திற்கு ஒரு கோடியே 23 லட்சம் நிதி வந்தது. ஆனால் தற்போது ரூ.63 லட்சம் மட்டும்தான் வழங்கப்படுகிறது. மாநில அரசு செயல்படுத்தும் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு வேண்டிய நிதியை ஊராட்சி ஒன்றிய நிதியில் இருந்தும், ஊராட்சி மன்றங்களின் நிதியிலிருந்தும் மடைமாற்றம் செய்கின்றனர். இதுகுறித்து உள்ளாட்சித் துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கடந்த ஓராண்டுக்கு முன்பு திருவிழந்தூர் பொட்டவெளி பகுதியில் 142 மீ. சிமெண்டு சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டது. அந்த சாலை முழுமையாக அமைக்க நிதி இல்லை என்பதால் இதுவரை பணி தொடங்கவில்லை.

பணிகள் தொடங்கவில்லை

மோகன்(தி.மு.க.): ஒன்றிய கவுன்சிலர்களிடம் மக்கள் கோரிக்கை விடுத்தால் அதனை நிறைவேற்றிகொடுப்பதற்கான எந்த நிதியும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. மக்களை சந்திக்க செல்ல முடியாத சூழல் இருந்து வருகிறது. சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைத்துகொடுக்க வேண்டும்.

சக்திவேல்(பா.ம.க.): பாண்டூர்-குளத்தூர் சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. அதை சீரமைத்து கொடுக்க வேண்டும். பொன்னூர்-கொற்கை சாலை நெடுஞ்சாலைத்துறையில் ஒப்படைக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் சீரமைக்கும் பணிகள் எதுவும் தொடங்கவில்லை.

சிவக்குமார்(தி.மு.க.): மாப்படுகை-ராமாபுரம் சாலை முதல்-அமைச்சர் சாலை மேம்பாடடு திட்டத்தில் டெண்டர் விடப்பட்டு பல மாதங்கள் ஆகியும், இதுவரை பணிகள் தொடங்கவில்லை. இவ்வாறு விவாதம் நடந்தது. இதில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய அலுவலர்கள், பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் மஞ்சுளா நன்றி கூறினார்.


Next Story