தமிழகத்தில் மது விற்பனை நேரத்தை ஏன் மாற்றக்கூடாது...? மதுரை ஐகோர்ட்டு கேள்வி


தமிழகத்தில் மது விற்பனை நேரத்தை ஏன் மாற்றக்கூடாது...? மதுரை ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 28 Nov 2022 4:39 PM IST (Updated: 28 Nov 2022 5:16 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் மது விற்பனை நேரத்தை மாற்ற ஏன் பரிசீலனை செய்யக்கூடாது என மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மதுரை,

தமிழகத்தில் மது விற்பனை நேரத்தை குறைக்கவும், பள்ளி மாணவர்களுக்கு மது விற்பனை செய்வதை தடுக்கவும் கோரி திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார், மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ் ஆகியோர் ஐகோர்ட்டு மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தனர்.

இந்த மனு நீதிபதி மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் தான் டாஸ்மாக் கடைகள் குறைவான நேரம் திறக்கப்படுகிறது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு, விற்பனையில் தமிழகம் தான் பிறமாநிலங்களைவிட முன்னிலையில் உள்ளது என்று தெரிவித்த நீதிபதிகள், மதுவிற்பனை நேரத்தை பிற்பகல் 2 முதல் இரவு 8 மணி வரை என மாற்ற ஏன் பரிசீலனை செய்யக்கூடாது என கேள்வி எழுப்பினர்.

அப்போது, கொரோனா காலத்தில் மற்ற மாநிலத்தில் இருந்து மதுவாங்கி வந்ததற்கான ஆயிரக்கணக்கான வழக்குகள் பதிவாகியுள்ளது. மது பிரியர்கள் மாற்று வழியையே யோசிக்கிறார்கள். மேலும், 21 வயது கீழ் உள்ளவர்களுக்கு மதுவிற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

அதனை கேட்ட நீதிபதிகள், மாணவர்களுக்கு மதுவிற்பனை 100 சதவீதம் செய்யப்படவில்லையா என்ற கேள்வி எழுப்பியதுடன், இந்த வழக்கு விசாரணையை வரும் டிச.1 தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Next Story