அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க ஏன் பயப்பட வேண்டும்? - டி.ஆர்.பாலு கேள்வி


அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க ஏன் பயப்பட வேண்டும்? - டி.ஆர்.பாலு கேள்வி
x

கோப்புப்படம்

அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க ஏன் பயப்பட வேண்டும் என்று டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பினார்.

புதுடெல்லி,

அதானி விவகாரம் தொடர்பாக நேற்றும் நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டு, இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து பேரணியாக வெளியே வந்தனர். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு பேசும்போது, "அதானி விவகாரத்தில் கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கேட்டால் அவர்கள் ராகுல்காந்தியை மன்னிப்பு கேட்க சொல்கிறார்கள். கூட்டுக்குழு அமைக்க ஏன் பயப்பட வேண்டும்?. அவர்கள்தான் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். அப்படி இருந்தும் ஏன் அமைக்கவில்லை? உண்மை உலகம் முழுவதும் தெரிந்துவிடும் என நினைக்கிறார்கள்" என்று கூறினார்.

காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் பேசுகையில், "பிரதமரும் பதில் சொல்லவில்லை. நிதி மந்திரியும் பதில் சொல்லவில்லை. நாடாளுமன்றத்தில் மந்திரிகளே குரல் எழுப்பி அவையை முடக்குவது புதிதாக உள்ளது" என்றார். கார்த்தி ப.சிதம்பரம் கூறுகையில், "எந்த சமாசாரமாக இருந்தாலும் எதிர்க்கட்சியினரை கேள்வி எழுப்ப விடுவதில்லை. அவர்கள் விருப்பத்துக்கு அவையை நடத்துகிறார்கள். முரட்டு பெரும்பான்மை இருப்பதால் எங்கள் குரலை ஒடுக்குகிறார்கள்" என்றார்.

விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசுகையில், "விவாதம் நடத்தவும் அனுமதிக்கவில்லை. கூட்டுக்குழுவும் அமைக்க முன்வரவில்லை" என்று கூறினார்.


Next Story