தாத்தா, பாட்டிகள் தினமும்உடற்பயிற்சி செய்தார்களா?இன்று இளைஞர்கள் ஏன் நடைப்பயிற்சி செய்ய வேண்டும்?பொதுமக்கள் கருத்து
இன்றைய இளைஞர்கள் ஏன் நடைப்பயிற்சி செய்ய வேண்டும்? என்று பொதுமக்கள் கருத்து தொிவித்துள்ளனா்.
நாம் அணியும் தானியங்கி கைக்கடிகாரம் தானாக இயங்கினாலும், அதன் தொடர் இயக்கத்திற்கு ஓர் இயக்கு விசை வேண்டும். நமது உடல் அசைவில் இருந்து அந்த விசையை அது எடுத்துக்கொள்கிறது. இல்லை என்றால் அது இயங்காமல் நின்றுவிடும். நமது உடலும் அப்படித்தான். அதற்கு விசை தேவைப்படுகிறது. அதற்குத்தான் உடற்பயிற்சி.
தாத்தா உடற்பயிற்சி செய்தாரா?
அப்படி என்றால் நம்முடைய தாத்தா, பாட்டிகள் காலத்தில் 'ஜிம்' இருந்ததா? அவர்கள் உடற்பயிற்சிகள் செய்தார்களா என்ற கேள்விகள் எழலாம். அதற்கு இல்லை என்றே பதிலும் சொல்லிவிடலாம்.
ஆனால் அப்போது பாசுமதி அரிசியும், பாலும் பாக்கெட்டுகளில் கிடைக்கவில்லை என்பதை நாம் உணர வேண்டும்.
அவர்கள் அன்றாட வாழ்க்கையில் உடல் உழைப்பு ஓர் அங்கமாக இருந்தது.
தாத்தா நிலம் உழுதார். நெல் விளைவித்தார். பசு வளர்த்தார். பால் கறந்தார். தினம்தினம் தேவைக்கு நெடுந்தூரம் நடந்தார். பாட்டி நெல் குத்தினார். ஆட்டு உரல், அம்மிக்கல் அரைத்தார். நீர் இறைத்தார்.
இன்று நமது வாழ்க்கை முறை தலைகீழாக மாறிவிட்டதே! தொழில்நுட்பம் வளரவளர, எந்திரங்களும் பெருக பெருக உடல் உழைப்புக்கு ஓய்வு கொடுத்து விட்டோம். அடுத்த தெருவில் இருக்கும் கடையில் மெழுகுவர்த்தி வாங்குவதற்குக்கூட நமது பையன் மோட்டார் சைக்கிளை எடுத்துச் செல்கிறான்.
மன அழுத்தம்
நாமோ இருந்த இடத்தில் இருந்து கொண்டே அத்தனை வேலைப்பளுவையும் மூளையில் அள்ளிக்கொட்டிக்கொள்கிறோம். இதனால் மன அழுத்தம். புதுப்புது நோய்களும் நம்மை தொற்றிக்கொள்கின்றன.
ஒரு காலத்தில் சர்க்கரை நோயை பணக்கார நோய் என்று பெருமையாக கிராமங்களில் பேசுவார்கள். பணம் வைத்திருப்பவர்களுக்கு உடல் உழைப்பு குறைந்து விட்டதால் அந்த நோய் வந்ததை அவர்கள் அறியவில்லை. இன்று உணர்கிறார்கள். உடற்பயிற்சியும் நடைப்பயிற்சியும் அவசியம் என்கிறார்கள். ஆனால் அதை அனைவரும் கடைப் பிடிக்கிறார்களா? இளைஞர்கள் என்ன செய்கிறார்கள்? என்பது பற்றி இவர்கள் கீழே என்ன சொல்கிறார்கள் என்பதை காண்போம்.
ஆரோக்கியமான சமுதாயம்
ஆசிய மற்றும் அகில இந்திய அளவில் நடந்த விளையாட்டு போட்டியில் இந்தியா சார்பில் விளையாடி தங்கப்பதக்கம் பெற்ற சென்னை கொரட்டூரைச் சேர்ந்த 59 வயதான எஸ்.சீனிவாசன் கூறும்போது, 'புதிய, புதிய நோய்கள் அவ்வப்போது வந்து செல்வதால், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி என்பது மிக முக்கியமாக தேவைப்படுகிறது. இது காலத்தின் கட்டாயமாகவும் இருக்கிறது. குறிப்பாக ஒரு சில இளைஞர்கள் துரித உணவுகளை எப்போதும் உட்கொள்வது மற்றும் மது அருந்துவது உள்ளிட்ட தவறான பழக்கவழக்கங்களில் அடிமையாகி கிடக்கின்றனர். இவர்களை சரியான பாதையில் வழிநடத்த ஆள் இல்லாததால் உடற்பயிற்சி, நடைபயிற்சியில் ஆர்வம் காண்பிப்பதில்லை. சர்வதேச மற்றும் அகில இந்திய அளவில் நடக்கும் உடற்பயிற்சி போட்டிகளில் கலந்து கொண்டு விருதுகள் பெறுபவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளும் அளிக்க முன்வர வேண்டும். இதன் மூலம் இளைஞர்கள் உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி செய்ய முன்வருவார்கள். நோயற்ற வாழ்வே, குறைவற்ற செல்வம் என்ற பொன்மொழிக்கு ஏற்ப ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க அனைத்து தரப்பு இளைஞர்களும் முன்வர வேண்டும்' என்றார்.
இளைஞர்கள் அதிக ஈடுபாடு
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ரகுபதி:-
உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்கிற திருமூலரின் கருத்தின்படி எதை இழந்தாலும் திரும்ப பெற்றுக்கொள்ளலாம், ஆனால் உடல்நலத்தை இழந்தால் திரும்பப்பெற முடியாது என்பதால் தினந்தோறும் உடற்பயிற்சி என்பது அன்றாட அவசியம் என்பதை இளைஞர்கள் தற்போது உணர்ந்தே இருக்கிறார்கள். அதனால்தான் தினந்தோறும் நடைபயிற்சியில் இளைஞர்களும், முதியவர்களும் திரளாக பங்கேற்பதை பார்க்க முடிகிறது. இன்றைய இளைஞர்கள் திரளாக உடற்பயிற்சி மையங்களை தேடி, தங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் நிறைந்திருப்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது. தினமும் நடைபயிற்சி, தியானம் மற்றும் விருப்பமுள்ள விளையாட்டில் தன்னை ஈடுபடுத்திக்கொள்வது என்பது ஒவ்வொரு இளைஞரிடமும் அதிகரித்து இருக்கிறது. நமது நாடு இளைஞர்களை அதிகம் பெற்றுள்ள நாடு என்பதால் இன்றைய இளைஞர்கள் உடல்நலனை பேணி பாதுகாப்பதற்காக நடைபயிற்சியிலும், உடற்பயிற்சியிலும் தங்களை அதிகமாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
சாதகமானதே....
மேல்மலையனூர் அருகே வளத்தியை சேர்ந்த காசிபாலாஜி:-
இன்று பெரும்பாலானோர் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சியின் அவசியத்தை தெரிந்து கொண்டுள்ளனர். நடைபயிற்சியின் மூலம் சர்க்கரை வியாதி, ரத்தஅழுத்தம் ஆகியவற்றை கட்டுக்குள் வைத்துக்கொள்ளவும், தேவையற்ற சதை மற்றும் எடை ஆகியவை குறையவும் வழிவகை செய்வதாக இருப்பதால் மேற்கண்டவைகளால் பாதிக்கப்பட்டவர்கள் நடைபயிற்சி, உடற்பயிற்சிகளை செய்து வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. இன்று மருத்துவர்கள்கூட இந்த பயிற்சிகளை செய்ய பரிந்துரைக்கின்றனர். நடைபயிற்சி செய்யும்போது சிலர் உயிரிழப்பதாக கூறுகின்றனர். இதில் பெரும்பாலானோர் வயதானவர்களே. அவர்கள் குறிப்பிட்ட தூரம் வரை நடைபயிற்சி மேற்கொண்டுவிட்டு திரும்பிவிட வேண்டும். ஆனால் நீண்ட தொலைவுக்கு சென்றுவிடுவதால் மூச்சுவிட முடியாமல் சிரமப்பட்டு இறக்கின்றனர் என்பது எனது கருத்து. என்னை பொறுத்தவரையில் நடைபயிற்சி, உடற்பயிற்சி இரண்டுமே சாதகமானதே ஆகும். இன்றைய இளைஞர்களிடத்திலும் இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
நோய் பாதிப்பு இ்ல்லாமல் வாழ...
திண்டிவனம் அழகு:-
நடைபயிற்சி என்பது சாதாரண ஒரு உடற்பயிற்சி. இது பல நோய்களை கட்டுப்பாட்டில் இருக்க உதவுகிறது. நான் கடந்த 20 வருடமாக நடைபயிற்சி மேற்கொண்டு வருகிறேன். அதுவும் நண்பர்களுடன் பேசிக்கொண்டே நடைபயிற்சி மேற்கொள்ளும்போது மனதுக்கு இதமாகவும், இன்பமாகவும் உள்ளது. நடைபயிற்சியால் மனது மற்றும் உடல் உறுப்புகள் ஆரோக்கியமான முறையில் சுறுசுறுப்புடனும் இயங்க உதவுகிறது. 71 வயதிலும் நான் நடைபயிற்சியை மேற்கொள்வதால் மகிழ்ச்சியும், புத்துணர்ச்சியும் தினந்தோறும் எளிதாக கிடைக்கிறது. தற்போது சர்க்கரை நோய், இளைஞர்கள் முதல் அனைத்து தரப்பு வயதினரையும் பாதிப்பு ஏற்படுத்தி வருகிற நிலையில் டாக்டர்களின் அறிவுரையின்பேரில் நடைபயிற்சி மேற்கொள்கிறார்கள். நடைபயிற்சியை தினமும் மேற்கொண்டால் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், மாரடைப்பு ஏற்படாமலும், உடல் எடை கூடாமல் இருப்பதற்கும் வழிவகுக்கும் என்பதை உணர்ந்துள்ளனர். தற்போது அனைத்து வயதினருக்கும் விழிப்புணர்வு ஏற்பட்டு பலரும் நடைபயிற்சியை மேற்கொண்டு வருகிறார்கள். நடைபயிற்சி செய்பவர்கள் நீண்ட நாட்கள் நோய்கள் பாதிப்பில்லாமல் வாழ்வதற்கு வழிவகுக்கிறது. இளைஞர்கள் பலரும் தற்போது நடைபயிற்சியை மேற்கொண்டு வருகிறார்கள்.
ஆரோக்கியம், புத்துணர்ச்சி
செஞ்சியை சேர்ந்த பாஷா:-
தினமும் நடைபயிற்சி செல்வதாலும், உடற்பயிற்சி செய்வதாலும் நமது உடல் உறுப்புகள் அனைத்தும் வலுப்பெறுகிறது, ரத்த ஓட்டமும் சீராகிறது. அன்றைய நாள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துடன் புத்துணர்ச்சியாக இருக்கிறது. எந்தவொரு செயலை மேற்கொண்டாலும் மிகவும் உற்சாகத்துடனும், சுறுசுறுப்பாகவும் வெற்றிகரமாக செய்ய முடிகிறது. உடற்பயிற்சி செய்வதால் நமக்குள் இருக்கும் வலிமைகளை வெளிப்படுத்தக்கூடிய ஒரு தருணமாகவும் அமைகிறது. மேலும் உடற்பயிற்சி செய்யாத அன்று உடல்சோர்ந்து சோம்பேறித்தனமாக இருப்பதை உணர முடிகிறது. எனவே நடைபயிற்சி, உடற்பயிற்சி என்பது அனைவருக்குமே மிகவும் அவசியமானது.
உடல் உழைப்பு குறைந்துவிட்டது
சங்கராபுரத்தை சேர்ந்த லட்சுமணகுமார் கூறியதாவது:-
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களுக்கு நடைபயிற்சியும், உடற்பயிற்சியும் அவசியமானதாகும். ஆனால் இன்றைய இளைஞர்கள் உடல் உழைப்பை குறைத்து ஆரோக்கியத்தை இழந்து வருகின்றனர். சாதாரணமாக வீட்டிற்கு தேவையான காய்கறி, பால், மளிகை பொருட்கள் வாங்க வேண்டுமானாலும் மோட்டார் சைக்கிளில் தான் செல்கிறார்கள். இதன் மூலம் இளைஞர்கள் முற்றிலுமாக நடந்து செல்லாமல் உள்ளனர்.
ஆனால் நம் முன்னோர்கள் அனைத்து வேலைகளையும் அவர்களே செய்து, நீண்ட ஆயுளுடன் வாழ்ந்தனர். இன்று அனைத்தும் கம்யூட்டர் மயமானதால் இளைஞர்கள் எந்தவொரு வேலையுமே செய்யாமல் உடல் உழைப்பு இல்லாமல் இருந்து வருகின்றனர். அத்துடன் உணவு பழக்க வழக்கங்களும் மாறிவிட்டது. இதனால் பல நோய்களுக்கு ஆளாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது என்றார்.
நடைபயிற்சி அவசியம்
கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஜெகன்நாதன் கூறியதாவது:-
ரத்த அழுத்தம், நெஞ்சு வலி, உடம்பு குறைத்தல் போன்ற பல்வேறு காரணங்களுக்காக பெரும்பாலும் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் பலர் நடை பயிற்சி செய்து வருகின்றனர்.
ஆனால் தற்போது உள்ள காலகட்டத்தில் உணவு பழக்க வழக்கங்கள் போன்றவைகளால் இளைஞர்களும் மற்றும் இளம் பெண்களுக்கு தற்போது ரத்த அழுத்தம் உள்பட பல்வேறு நோய்கள் வருகிறது.
எனவே தற்போது இளைஞர்கள், இளம் பெண்களுக்கு நடைப்பயிற்சி அவசியமாக உள்ளது. அதே போல் உடற்பயிற்சி செய்வது உடல் நலத்தை பேணிக்காப்பது மட்டுமல்லாமல், நம்மை காக்க உதவுகிறது.