விருதுநகரில் பல் மருத்துவக்கல்லூரி தொடங்க தாமதம் ஏன்?


விருதுநகரில் பல் மருத்துவக்கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர்

பெருந்தலைவர் காமராஜர் பிறந்த மண்ணில் மருத்துவக்கல்லூரி தொடங்கப்படும் என்று கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில் மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்ததோடு அதற்கான தொடக்க நடவடிக்கைகளுக்கு நிதி ஒதுக்கீடும் செய்தார். இதனை தொடர்ந்து அப்போது அமைச்சர்களாக இருந்த சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் மருத்துவக்கல்லூரிக்கான இடத்தை தேர்வு செய்தனர். ஆனால் அதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஆகையால் மருத்துவக்கல்லூரி திட்டம் முடங்கியது.

மருத்துவக்கல்லூரி

இதையடுத்து மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தென் மாவட்டங்களில் பல் மருத்துவக்கல்லூரி மற்றும் ஆய்வு மையம் தொடங்கப்படும் என்று அறிவித்தார். அப்போது விருதுநகர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த மாபா பாண்டியராஜன் பல் மருத்துவக்கல்லூரி மற்றும் ஆய்வு மையத்தை விருதுநகரில் தொடங்க வேண்டும் என்று ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைத்தார். ஜெயலலிதாவும் அதை பரிசீலிப்பதாக தெரிவித்திருந்தார்.

அவரது மறைவுக்கு பின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி விருதுநகரில் பல் மருத்துவக்கல்லூரி தொடங்கப்படும் என்று அறிவித்ததோடு அதற்காக முதல் கட்டமாக ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடும் செய்தார். விருதுநகரில் பல் மருத்துவக்கல்லூரிக்கு பொது மருத்துவக்கல்லூரி இல்லாமல் அனுமதி வழங்க முடியாதென இந்திய மருத்துவ குழு மறுத்தது.

இடம் தேர்வு

இதனைத்தொடர்ந்து தமிழக அரசு வலியுறுத்தியதின் பேரில் மத்திய அரசு தமிழகத்தில் விருதுநகர் உள்ளிட்ட 11 இடங்களில் மருத்துவக்கல்லூரி தொடங்க அனுமதி அளித்தது. விருதுநகரில் தேசிய நெடுஞ்சாலையில் கலெக்டர் அலுவலக வளாகம் அருகே அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு மத்திய, மாநில அரசுகளின் நிதிஒதுக்கீட்டில் ரூ.379 கோடி மதிப்பில் மருத்துவக்கல்லூரி கட்டி முடிக்கப்பட்டு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

கடந்த 2021-ம் ஆண்டு தொடக்கத்தில் விருதுநகரில் பல் மருத்துவக்கல்லூரிக்கான இடம் கலெக்டர் அலுவலக வளாகம் அருகே தேர்வு செய்வதற்கு சென்னை பல் மருத்துவக்கல்லூரி முதல்வர் தலைமையிலான உயர்மட்ட குழு நேரடியாக வந்து ஆய்வு செய்தது. மாவட்ட நிர்வாகம் இதற்காக 8 ஏக்கர் நிலத்தை தேர்வு செய்தது.

விண்ணப்பம்

இதற்கிடையில் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் பல் மருத்துவக்கல்லூரி அலுவலகம் திறக்கப்பட்டது. பொது மருத்துவக்கல்லூரி செயல்பாட்டிற்கு வந்தபின் பல் மருத்துவக்கல்லூரிக்கு அனுமதி அளிப்பதில் எவ்வித தடையும் இல்லாத நிலையில் இந்திய மருத்துவகுழுவுக்கு பல் மருத்துவக்கல்லூரி தொடங்க விண்ணப்பிக்கப்பட்டது. இதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனாலும் பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்க பணிகள் முடக்கமடைந்தது. தற்போதைய நிலையில் சென்னையில் மட்டுமே அரசு மருத்துவக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. கடலூரில் தனியார் பல் மருத்துவக்கல்லூரி செயல்பாட்டில் உள்ளது. எனவே தென் மாவட்டத்தில் இருந்து பல் மருத்துவக்கல்லூரியில் படிக்க வேண்டிய மாணவர்கள் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

எனவே தென் மாவட்டங்களில் பல் மருத்துவக்கல்லூரி தொடங்ங்கப்பட வேண்டியது அவசியம் ஆகும். ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி இடம் தேர்வு செய்யப்பட்டு தயாராக உள்ள நிலையில் விருதுநகரில் பல் மருத்துவக்கல்லூரி மற்றும் ஆய்வு மையம் தொடங்கப்பட வேண்டியது அவசியம் ஆகும்.

ஆய்வு மையம்

இதுகுறித்து விருதுநகர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான மாபா பாண்டியராஜன் கூறியதாவது:-

தென் மாவட்டங்களில் பல் மருத்துவக்கல்லூரி தொடங்கப்படும் என்று ஜெயலலிதா அறிவித்தவுடன் விருதுநகர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த நான் பல் மருத்துவக்கல்லூரி மற்றும் ஆய்வு மையத்தை விருதுநகரில் தொடங்க வேண்டும் என்று அவரிடம் நேரில் வலியுறுத்தினேன். அவரும் இதற்கு ஒப்புதல் அளித்தார். அவரது மறைவுக்கு பின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி விருதுநகரில் பல் மருத்துவக்கல்லூரி தொடங்கப்படும் என்று அறிவித்ததுடன் அதற்காக ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடும் செய்தார்.

இதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டு தொடக்க நடவடிக்கைகள் தொடங்கப்பட்ட நிலையில் இந்திய மருத்துவ குழு அனுமதி அளிக்காததால் பணி முடங்கியது. ஆனாலும் தற்போது பொது மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட்டு விட்ட நிலையில் பல் மருத்துவக்கல்லூரிக்கான அனுமதி வழங்குவதில் இந்திய மருத்துவ குழுவிற்கு எந்தவித ஆட்சேபனையும் இருக்க முடியாது. எனவே தமிழக அரசு பல் மருத்துவக்கல்லூரி திட்டம் முடக்கம் அடையாமல் உடனடியாக விருதுநகரில் பல் மருத்துவக்கல்லூரி மற்றும் ஆய்வு மையம் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

காமராஜர் பிறந்த மண்

மக்கள் நீதி மய்யத்தின் மாவட்ட செயலாளர் காளிதாஸ்:-

விருதுநகரில் பல் மருத்துவக்கல்லூரி தொடங்கப்படும் என்று அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் அறிவிக்கப்பட்டது. அதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் பல் மருத்துவக்கல்லூரி தொடங்குவதற்கான பணிகள் விரைவுப்படுத்தப்படாமல் முடங்கியுள்ளது. இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் சார்பில் முதல்-அமைச்சருக்கும் நடவடிக்கை எடுக்க கோரி மனுக்கள் அனுப்பியுள்ளோம்.

சென்னை தவிர வேறு எங்கும் தமிழகத்தில் அரசு பல் மருத்துவக்கல்லூரி இல்லாத நிலையில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த மண்ணில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பல் மருத்துவக்கல்லூரியை தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

கல்வி நிறுவனங்கள்

கல்லூரி மாணவர் பால்பாண்டி:-

விருதுநகரில் மத்திய,மாநில அரசுகளின் நடவடிக்கையில் பொது மருத்துவக்கல்லூரி செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இந்தநிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பல் மருத்துவக்கல்லூரியினையும் செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலமே தென் மாவட்டத்தில் உள்ள மாணவர்கள் இங்கு பல்மருத்துவம் பயில வாய்ப்பு ஏற்படும். இல்லை என்றால் தற்போது வட மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.

எனவே அரசு தாமதிக்காமல் இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் ஆகும்.

கல்வியாளர் ஜெரால்டு ஞானரத்தினம்:-

கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜரின் மாவட்டத்தில் தொடக்கநிலை கல்வி முதல் உயர்நிலைக் கல்வி வரை அனைத்து கல்வி நிறுவனங்களும் உள்ள நிலையில் பல் மருத்துவக்கல்லூரி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது அது தொடங்கப்படாமல் காலதாமதம் ஆகியது. எனவே தமிழக அரசு அறிவிக்கப்பட்ட பல் மருத்துவக்கல்லூரி மற்றும் ஆய்வு மையத்தை உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியமாகும்.

வலியுறுத்தல்

ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் எம்.எல்.ஏ:-

விருதுநகரில் பல் மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட வேண்டும் என்று ஏற்கனவே மாவட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய உங்கள் முதல்வன் திட்டப்பட்டியலில் மாவட்ட நிர்வாகம் மூலம் முதல்-அமைச்சருக்கு அனுப்பி உள்ளேன். தற்போதைய நிலையில் பொது மருத்துவக்கல்லூரி செயல்பாட்டிற்கு வந்துள்ளதால் பல் மருத்துவக்கல்லூரி தொடங்க இந்திய மருத்துவ குழு அனுமதி அளிப்பதில் எவ்வித தடையும் இல்லாத நிலை உள்ளது. எனவே உடனடியாக தமிழக அரசு பல் மருத்துவக்கல்லூரியை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுகுறித்து சட்டமன்றத்திலும், சுகாதாரத்துறை அமைச்சரிடமும் வலியுறுத்தி வருகிறேன்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.


Next Story