விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு ஏன்? - எடப்பாடி பழனிசாமி விளக்கம்


விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு ஏன்? - எடப்பாடி பழனிசாமி விளக்கம்
x

முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க. விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

சென்னை,

விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் 6-ம் தேதி திடீர் உடல்நலக் குறைவால் காலமானார். இதனால் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூலை 10-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், தி.மு.க சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர்.அபிநயா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. சார்பில் சி.அன்புமணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க. விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது:-

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் ஜனநாயக படுகொலை நடந்தது. ஆடு, மாடுகளை பட்டியில் அடைப்பது போன்று, இடைத்தேர்தலின்போது, வாக்காளர்களை பட்டியில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தினர். தேர்தல் ஆணையம் அதை கண்டு கொள்ளவில்லை. காவல்துறை, அரசு அதிகாரிகள் இதற்கு துணை நிற்கின்றனர். அமைச்சர்கள் அங்கே முகாமிட்டு ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி முறைகேடு புரிந்தனர்.

தி.மு.க. ஆட்சியில் மக்கள் சுதந்திரமாக வாக்களிக்க முடியாத நிலை உள்ளது. இதனால் நாங்கள் தேர்தலை புறக்கணிக்கிறோம். மக்கள் சட்டமன்றம், நாடாளுமன்றம் எனத் தேர்தலைப் பிரித்து பார்த்து வாக்களிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story