'ஹரிஜன்' என குறிப்பிட்டுப் பேசியது ஏன்?கவர்னர் விளக்கம் அளிக்க தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்


ஹரிஜன் என குறிப்பிட்டுப் பேசியது ஏன்?கவர்னர் விளக்கம் அளிக்க தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்
x

ஆதிதிராவிடர் எனும் சொல் இங்கே அதிகாரபூர்வமாக நடைமுறையில் இருக்கும்போது, ஹரிஜன் எனக் குறிப்பிட்டு பேசியது ஏன் என கேள்வி எழுவதாக தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடந்த 17-ந்தேதி சென்னையில் மாணவர் விடுதியொன்றைத் திறந்துவைத்துப் பேசிய தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டில் உள்ள பட்டியல் சமூகத்தவரை 'ஹரிஜன்' எனக் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். இது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

பட்டியல் சமூகத்தின் உயர்கல்வி குறித்து கவர்னர் அக்கறை காட்டியிருப்பதை வரவேற்றுப் பாராட்டுகிறோம். ஆனால், ஆதிதிராவிடர் எனும் சொல் இங்கே அதிகாரபூர்வமாக நடைமுறையில் இருக்கும்போது, ஹரிஜன் எனக் குறிப்பிட்டு பேசியது ஏன் என்கிற கேள்வி எழுகிறது? திராவிடர் என்னும் சொல் மீதான வெறுப்புதான் காரணமா? அல்லது சனாதன உளவியல்தான் காரணமா?.

கவர்னர் ஏனோதானோ என பேசக்கூடியவரல்ல; பேசவும் கூடாதல்லவா? எனவே, கவர்னர் எத்தகைய உளவியல் நிலையில் இருந்து அவ்வாறு உரையாற்றினார் என்பதை தெளிவுபடுத்த வேண்டுகிறோம். இந்திய அரசு இவ்வளவு சுற்றறிக்கைகளை வெளியிட்ட பின்னரும் அந்த அரசின் பிரதிநிதியாக இருக்கும் கவர்னர் இவ்வாறு பொது வெளியில், அதுவும் மாணவர்களிடையே அந்த சொல்லைப் பயன்படுத்திப் பேசியிருப்பது சரியானதுதானா? என அவர் சிந்திக்க வேண்டும். அவரைப் பின்பற்றி வேறு யாரும் அந்தச் சொல்லைப் பயன்படுத்தாமல் இருக்க அவர் உரிய விளக்கத்தை அளிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story