பாட்டியை கொலை செய்தது ஏன்? கைதான பேரன் பரபரப்பு வாக்குமூலம்
பாட்டியை கொலை செய்தது ஏன்? என்று கைதான பேரன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
குன்னம்:
சொத்தில் பங்கு கேட்டு...
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள நொச்சிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் ரெங்கநாதன். இவரது மனைவி ஜானகி(வயது 65). இவர்களுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. இதில் 2-வது மகளான சகுந்தலா தனது கணவர் ரவிச்சந்திரன், மகன் மணிமாறன்(26) ஆகியோருடன் மேலஉசேன் நகரம் கிராமத்தில் வசித்து வருகிறார். மணிமாறன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரெங்கநாதன் இறந்துவிட்டார். இதையடுத்து ஜானகி சொத்துகளை விற்று, அதில் கிடைத்த பணத்தை 5 பங்காக பிரித்து, ஒரு பங்கை தனக்கு வைத்துக்கொண்டு மற்ற பங்குகளை தனது மகள்கள் மற்றும் மகனுக்கு பிரித்து கொடுத்துள்ளார். இதில் தனது பெரியம்மாள் மற்றும் சித்திக்கு அதிக பங்கு கொடுத்ததாகவும், தனது தாய் சகுந்தலாவிடம் ஜானகி பாரபட்சமாக செயல்படுவதாகவும் மணிமாறன் கூறி, ஜானகியிடம் சொத்தில் பங்கு கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்துள்ளார். இதனால் மணிமாறனை ஜானகி திட்டியதாக கூறப்படுகிறது.
பணம் கேட்டார்
இந்நிலையில் ஒரு ஏக்கர் நிலத்தை ஜானகி விற்க இருந்த நிலையில், தற்போதாவது பணம் கொடுக்குமாறு கேட்டு அவரை மணிமாறன் தொந்தரவு செய்துள்ளார். ஆனால் அவரது பேச்சை ஜானகி கேட்காததால் மணிமாறன் ஆத்திரம் அடைந்தார்.
மேலும் சொத்தில் பங்கு கேட்டு தனது நண்பர்களான அல்லி நகரத்தைச் சேர்ந்த டிராக்டர் டிரைவர்களான மதியழகனின் மகன் சம்பத்(27), செந்தில்குமாரின் மகன் ரமேஷ்(25), பெயிண்டரான கலைவாணன்(40) ஆகியோரை அழைத்துக் கொண்டு தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார்.
மேலும் 2 பேர் கைது
அங்கு மணிமாறன், தனது நண்பர்களை வாசலில் நிற்க வைத்துவிட்டு, வீட்டிற்குள் சென்றுள்ளார். அங்கு சொத்தில் பங்கு கேட்டு ஜானகியிடம் தகராறு செய்துள்ளார். ஆனால் அவர் சொத்தில் பங்கு தர மறுத்ததால் ஆத்திரமடைந்த மணிமாறன், ஜானகியின் தலையில் அரிவாளால் வெட்டினார். இதையடுத்து அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜானகி, அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இது குறித்து குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன், சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மணிமாறன், சம்பத் ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து நேற்று ரமேஷ், கலைவாணன் ஆகியோரை கைது செய்தனர்.
வாக்குமூலம்
இந்நிலையில் போலீசாரிடம் மணிமாறன் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது;-
மணிமாறன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு புதிதாக டிராக்டரை வாங்கியுள்ளார். அதற்காக மாதம் ரூ.43 ஆயிரம் கடன் தொகையை செலுத்த வேண்டிய நிலை இருந்துள்ளது. அந்த கடன் தொகையை அவரது வருவாய் மூலம் செலுத்த முடியவில்லை. இதனால் தனது பாட்டி ஜானகியிடம் பணம் தந்து உதவுமாறு கேட்டுள்ளார். ஆனால் அந்த தொகையை தர ஜானகி மறுத்துள்ளார்.
இதனால் அவரிடம் 'எனது அம்மா சகுந்தலா உன் வயிற்றில் பிறக்கவில்லையா? பெரியம்மா, சின்னம்மாவிற்கு உதவி செய்வது போல எங்களுக்கு உதவி செய்யலாம் அல்லவா? என்று கூறி சொத்தில் பங்கு கேட்டுள்ளார். மேலும் மணிமாறன் ஜானகியிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். ஆனால் அவரை தகாத வார்த்தைகளால் ஜானகி திட்டியதால் ஆத்திரமடைந்த அவர், தான் வைத்திருந்த அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
சிறையில் அடைப்பு
பின்னர் 4 பேரையும் பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ேபாலீசார் ஆஜர்படுத்தினர். இதையடுத்து நீதிபதி உத்தரவின்பேரில் 4 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.