பரவலாக பலத்த மழை - விவசாயிகள் மகிழ்ச்சி
மதுரை மாநகர் மற்றும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மதுரை மாநகர் மற்றும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கனமழை
மதுரை மாநகரில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேபோல் நேற்று மழை நேரத்திலும் வானில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் பெய்த பலத்த மழையால் முக்கிய சாலைகளில் மழை நீர் தேங்கியது.
அதே போல் உசிலம்பட்டி நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான தொட்டப்பநாயக்கணூர், உத்தப்பநாயக்கணூர், செல்லம்பட்டி, கருமாத்தூர், எழுமலை, சேடபட்டி, சின்னக்கட்டளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. இந்த கனமழை காரணமாக உசிலம்பட்டியின் முக்கிய சாலைகளான மதுரை ரோடு, தேனி ரோடு, பேரையூர் ரோடு மற்றும் வத்தலக்குண்டு ரோடு பகுதிகளில் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய வைத்தவாறு ஊர்ந்து கொண்டே சென்றன.
விவசாயிகள் மகிழ்ச்சி
மேலும் உசிலம்பட்டி நகர் போலீஸ் நிலையம் தாழ்வான பகுதியில் அமைந்துள்ளதால் போலீஸ் நிலையத்திற்குள் மழைநீர் புகுந்தது. மேலும் உசிலம்பட்டியின் தற்காலிக பஸ் நிலையத்தில் முறையான நிழற்குடை வசதிகள் ஏற்படுத்தி கொடுக்காததால், பயணிகள் ஆங்காங்கே இருந்த கடைகளுக்குள் தஞ்சமடைந்து அவதிக்குள்ளாகினர்.
பாலமேடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கடும் வறட்சி நிலை ஏற்பட்டு வெயிலின் தாக்கத்தினால் பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் சில நாட்களாக மாலை நேரத்தில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால்ஆடி பட்டத்தில் மானாவாரியாக விதைப்பு செய்யப்பட்டிருந்த நிலக்கடலை, கம்பு, பயறு வகைகள் முளைத்து பசுமையாக இருந்தது. இதனால் இந்தப் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.
அழகர்கோவில்
இதேபோல் அழகர்கோவில் மலை பகுதியில் உள்ள நூபுர கங்கை ராக்காயி அம்மன் கோவில், ஆறாவது படைவீடு சோலைமலை முருகன் கோவில் மற்றும் அழகர் மலை அடிவாரத்தில் உள்ள கள்ளழகர் பதினெட்டாம் படி கருப்பணசுவாமி கோவில் மற்றும் கோட்டை வாசல் பகுதிகளில் நேற்று மாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் பலத்த மழை பெய்தது.
இதனால் சிற்றோடைகளில் சிறிது நேரம் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.