மாவட்டம் முழுவதும் பரவலாக மழை


மாவட்டம் முழுவதும் பரவலாக மழை
x

விருதுநகர் மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

விருதுநகர் மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது.

வத்திராயிருப்பு

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்தநிலையில் வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான அழகாபுரி, கூமாபட்டி, கான்சாபுரம், தம்பிபட்டி, மகாராஜபுரம், கோபாலபுரம், பிளவக்கல் அணை, அத்தி கோவில், சதுரகிரி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று 1 மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் சாலையில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான அத்தி கோவில், சதுரகிரி உள்ளிட்ட பகுதிகளில் நீரோடைகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இந்த மழை விவசாயத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் கூறினர்.

ராஜபாளையம்

ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று பகல் கடுமையான வெயில் அடித்தது. இந்தநிலையில் மாலையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்தது. ராஜபாளையம் நகர் பகுதி, சத்திரப்பட்டி, தளவாய்புரம், செட்டியார்பட்டி, முகவூர், சேத்தூர், தேவதானம், கோவிலூர், சொக்கநாதன் புத்தூர், நல்லமங்கலம், புத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

இதனால் நகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் நேற்று மாலை 4 மணி முதல் 5 மணி வரை பலத்த மழை பெய்தது. இந்த மழையினால் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் பகுதிகளிலும், வட பத்திர சைனர் சன்னதி பகுதிகளிலும் நீர் தேங்கியது. கோவில் ஊழியர்கள் தேங்கிய நீரை மோட்டார் மூலம் வெளியேற்றினர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள இடையன்குளம் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி. அய்யம்பட்டி தேவர் தெரு பகுதியில் வசித்து வருபவர் பொன்னுத்தாய். இவர்கள் இருவரின் வீடுகளும் மழையின் காரணமாக இடிந்து விழுந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய் துறையினர் விரைந்து சென்று இடிந்து விழுந்த வீடுகளை பார்வையிட்டனர். அப்போது அவர்கள் நிவாரணத்தொகை வழங்கவும், வீடுகட்டி தர வேண்டும் எனவும் அவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.


Related Tags :
Next Story