மாவட்டம் முழுவதும் பரவலாக மழை
மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.
கடலூர்:
வங்கக்கடலில் கடந்த 28-ந்தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவும், அதனைத் தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுவடைந்தது. இது மேற்கு திசையில் நகர்ந்து, இலங்கை-திரிகோணமலைக்கும், மட்டக்களப்பிற்கும் இடையே கரையை கடந்தது. தொடர்ந்து, தென்மேற்கு திசையில் இந்த தாழ்வு மண்டலம் நகர்ந்து, குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் நிலவக்கூடும் என்றும், அதனால் வடமாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
அதன்படி கடலூரில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றும் காலை முதல் வானில் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டது. அவ்வப்போது சாரல் மழை பெய்தது. இந்த நிலையில் மதியம் 12.15 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக கொட்டியது. இந்த மழை இடைவிடாது சுமார் ½ மணி நேரம் கொட்டித் தீர்த்தது. இதனால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர், தாழ்வான பகுதிகளில் குளம்போல் தேங்கியது. மேலும் திடீரென பெய்த மழையால் பாதசாரிகளும், இருசக்கர வாகன ஓட்டிகளும் நனைந்தபடி சென்றதை காண முடிந்தது.
அதன் பிறகு மாலை வரை மழை பெய்யாமல், வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதேபோல் சிதம்பரம், விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில், பண்ருட்டி என மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் சம்பா அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களை மழைநீர் சூழ்ந்து நிற்பதால், அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மாவட்டத்தில் அதிகபட்சமாக காட்டுமன்னார்கோவிலில் 22 மில்லி மீட்டரும், விருத்தாசலத்தில் ஒரு மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.