கோவையில் பரவலான மழை


கோவையில் பரவலான மழை
x

கோவையில் நேற்று பரவலான மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கோயம்புத்தூர்

கோவை, மே.20-

கோவையில் நேற்று பரவலான மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கோடை மழை

கோவை மாவட்டத்தில் கோடைகாலம் தொடங்கியதில் இருந்தே மாநகர் மற்றும் புறநகரில் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருகிறது. தற்போது அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் என்றாலும் கோவை மாவட்டத்தை பொறுத்தவரை இந்த ஆண்டு அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கம் சற்று குறைவாகவே உள்ளது.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கோவையில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் இரவு கனமழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து நேற்று காலையும் பலத்த மழை பெய்தது. இதனால் கல்லூரி மற்றும் வேலைக்கு சென்றவர்கள் மழையின் நனையாமல் இருக்க குடைப்பிடித்தப்படியும், இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மழை கோட்டு அணிந்தும் சென்றதை காணமுடிந்தது.

இதன் காரணமாக கோவையில் உள்ள முக்கிய ரோடுகளான அவினாசி ரோடு, திருச்சி ரோடு, சத்தி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு உள்பட அனைத்து ரோடுகளின் ஓரத்தில் மழைநீர் ஆறுபோன்று ஓடியது. மேலும் மாநகர பகுதியில் பல இடங்களில் மழையில் நனையாமல் இருக்க பொதுமக்கள் குடை பிடித்தவாறு சென்றனர்.

விவசாயிகள் மகிழ்ச்சி

கோவையில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக தடுப்பணைகள், குளங்கள், குட்டைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

கோவை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு விவரம் (மி.மீட்டரில்) வருமாறு:-

கோவை விமான நிலையம்-70, சின்கோனா-64, சின்னக்கல்லார்-42, வால்பாறை- 60, சோலையாறு-77, ஆழியாறு-24, பொள்ளாச்சி-12, கோவை வேளாண் கல்லூரி-3 மழையும் பதிவானது.


Next Story