கோவையில் பரவலாக மழை
கோவையில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் 20 அடியாக உயர்ந்து உள்ளது.
கோவையில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் 20 அடியாக உயர்ந்து உள்ளது.
பரவலாக மழை
கோவையில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. அவ்வப்போது லேசான மழை மட்டுமே பெய்தது. இந்த நிலையில் கோவையில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி கோவையில் நேற்று காலையில் இருந்தே மழை தூறிக்கொண்டே இருந்தது. பின்னர் சிறிது நேரம் கழித்து சில பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்தது.
இதன் காரணமாக சாலையில் மழைவெள்ளம் ஆறாக ஓடியது. கோவை ரெயில் நிலையம் அருகே உள்ள லங்கா கார்னர் ரெயில்வே பாலத்தின் கீழ்ப்பகுதியில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் அந்த வழியாக சென்ற வாகனங்கள் தண்ணீரில் தத்தளித்தப்படி சென்றன.
2-வது நாளாக தடை
கோவை அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் மழை வெளுத்து வாங்கியது. இதனால் கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் 2-வது நாளாக நேற்றும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து அங்குள்ள சாடிவயல் சோதனைச்சாவடியில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் ஆற்றில் இருந்து வாய்க்கால்கள் மூலம் குளங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.
20 அடியாக உயர்வு
அதுபோன்று கோவைக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதனால் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து உள்ளதால், அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
அணையில் இருந்து குடிநீருக்காக 9 கோடியே 90 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து உள்ளதால் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அணையின் நீர்மட்டத்தை கண்காணித்து வருகிறார்கள்.