கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை
கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்த
அந்தமான் கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, தற்போது அந்தமான் தீவுகளுக்கு சுமார் 500 கிலோ மீட்டர் தொலைவிலும், மேற்கு வங்க மாநிலம் சாகர் தீவுகளுக்கு சுமார் 750 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
இது மேலும் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடைந்து புயலாக மாறி வங்காளதேசம் அல்லது மேற்கு வங்க கரையோரம் நாளை (செவ்வாய்க்கிழமை) கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
மழை
அதன்படி கடலூரில் நேற்று முன்தினம் கன மழை பெய்தது. விட்டு, விட்டு பெய்த கன மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. இரவில் மழை பெய்யவில்லை. இருப்பினும் நேற்று காலை வரை குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.
இதேபோல் பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, அண்ணாமலைநகர், ஸ்ரீமுஷ்ணம், சேத்தியாத்தோப்பு, வேப்பூர், வானமா தேவி, லக்கூர், ஸ்ரீமுஷ்ணம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. இருப்பினும் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெலாந்துறையில் 30.4 மில்லி மீட்டர் மழை பதிவானது. குறைந்தபட்சமாக கொத்தவாச்சேரி, புவனகிரியில் தலா 1 மில்லி மீட்டர் மழை பெய்தது.