கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பரவலாக மழை
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பரவலாக மழை அதிகபட்சமாக கலையநல்லூரில் 20 மில்லி மீட்டர் பதிவு
கள்ளக்குறிச்சி
வங்கக்கடலில் அந்தமான் அருகே நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதியானது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது என்றும், இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து புயலாக மாறி பின்னர் வளைந்து வடக்கு நோக்கி நகர்ந்து ஒடிசா கரையை உரசியவாறு மேற்கு வங்கம் அல்லது வங்கதேசம் அருகே 25-ந் தேதி கரையை கடக்கக்கூடும் எனவும், அதனால் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், வட மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. தொடா்ந்து நேற்றும் மழை பெய்தது.
கள்ளக்குறிச்சியில் நேற்று காலை வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது. பின்னர் பகல் 12 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. முதலில் லேசான தூறலுடன் பெய்ய தொடங்கிய மழை நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக சுமார் 1 மணி நேரம் பெய்தது. அதேபோல் மீண்டும் மாலை 3 மணி முதல் 4½ மணிவரை பலத்த மழை பெய்தது. இதனால் சாலை மற்றும் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் தாழ்வான பகுதிகளில் குளம்போல தேங்கியது.
அதேபோல் கலையநல்லூர், மணலூர்பேட்டை, அரியலூர், ரிஷிவந்தியம், தியாகதுருகம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைபெய்தது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மில்லி மீட்டர் அளவில் கலையநல்லூர்-20, கடுவனூர்-18, மணலூர்பேட்டை-17, அரியலூர்-15, யூ.கீரனூர்-14, ரிஷிவந்தியம்-10, வடசிறுவள்ளூர்-9, சூளாங்குறிச்சி-7, தியாகதுருகம்-6, கீழ்ப்பாடி-6, விருகாவூர்-5, எறையூர்-5, கள்ளக்குறிச்சி-4, மூரார்பாது-4, சின்னசேலம்-3 பதிவானது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சராசரியாக 6.80 மில்லி மீட்டர் மழை பெய்தது.