கரூர் மாவட்டத்தில் பரவலாக மழை


கரூர் மாவட்டத்தில் பரவலாக மழை
x

கரூர் மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்ததால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

கரூர்

பரவலாக மழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக தமிழகம், புதுச்சேரி கடற்கரையை இன்றுக்குள் (சனிக்கிழமை) நகர்ந்து வரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக பெரும்பாலான இடங்களில் நேற்று முதல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை கனமழை பெய்யும் என அறிவித்துள்ளது.இந்த நிலையில் கரூரில் நேற்று காலை முதல் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழையானது தொடர்ந்து பரவலாக பெய்தது. இந்த மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அளித்து கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவிட்டார். அதன்படி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டன.

வாகன ஓட்டிகள் அவதி

இந்தநிலையில் கரூர், தாந்தோன்றிமலை, காந்திகிராமம், பசுபதிபாளையம், வெங்கமேடு உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் ேநற்று காைல முதல் பரவலாக ெபய்தது. இதனால் காலையில் வேலைக்கு சென்றவர்கள் மழையில் நனைந்து கொண்டும், குடைபிடித்தபடியும் சென்றதை காண முடிந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். கரூர் பஸ் நிலையத்தில் பயணிகள் கையில் குடை பிடித்துக் கொண்டு பஸ்சுக்காக காத்திருந்தனர். இந்த மழையால் கரூரில் பல்வேறு இடங்களில் சாலையோரங்களில் மழை நீர் தேங்கி நின்றது. இந்த மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சற்று பாதிப்படைந்தது. கரூா் கடைவீதிகளிலும் கூட்டம் குறைவாக காணப்பட்டது.

குளித்தலை

குளித்தலை பகுதியில் நேற்று அதிகாலை முதலே மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை இரவு வரை தொடர்ந்து இடைவிடாமல் பெய்து கொண்டே இருந்தது. சில நிமிடங்கள் மழை விட்டாலும் மீண்டும் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் பொதுமக்கள் நடமாட்டம் மிகக் குறைந்த அளவே இருந்தது. இருப்பினும் கடைக்குச் செல்லும் பொதுமக்கள் நனைந்தபடியும் குடை பிடித்த படியும் சென்று வந்தனர். பஸ்சில் பயணம் செல்ல வேண்டி குளித்தலை பஸ் நிலையத்திற்கு வந்த பயணிகள் பலர் மழையில் நனைந்தபடியும் அப்பகுதியில் உள்ள கடைகளில் ஓரமாக நின்றபடி பஸ்சிற்காக காத்திருந்தனர். சாலையோர கடைகள் பல இன்று போடப்படவில்லை. அதுபோல குளித்தலை காவேரி நகர் மற்றும் உழவர் சந்தை பகுதிகளில் தரைக்கடை அமைத்து வியாபாரம் செய்யும் காய்கறி வியாபாரிகள் பெரும்பாலோர் கடைகள் அமைக்கவில்லை ஒரு சிலரே மழையில் நனைந்தபடி குடை பிடித்தவாறு வியாபாரம் செய்து வந்தனர். குளித்தலையில் வாரச்சந்தை என்பதால் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தொடர்ந்து மழை பெய்து வந்த காரணத்தால் குண்டும் குழியுமான சாலைகள் மற்றும் பள்ளங்களில் மழை நீர் தேங்கி நின்றது தொடர் மழையால் வியாபாரிகள் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை சற்று பாதிக்கப்பட்டது.

நொய்யல்

தவிட்டுப்பாளையம், நன்செய் புகழூர், பாலத்துறை, புன்னம், புன்னம் சத்திரம், திருக்காடுதுறை, நத்தமேடு, நடையனூர், சேமங்கி, குந்தாணி பாளையம்,மரவாபாளையம், குறுக்குச்சாலை, அத்திப்பாளையம் உள்பட நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலையில் இருந்து இடைவிடாமல் பரவலமாக மழை பெய்தது. இதனால் சாலையோர கடைக்காரர்கள் வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். வேலைக்கு நடந்தும், மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் பலர் மழையில் நனைத்தும், குடைபிடித்தும் சென்றதையும் காண முடிந்தது. இப்பகுதியில் தொடர் மழை பெய்து வருதால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. மழையின் காரணமாக சாலையின் இருபுறமும் உள்ள குழிகளில் மழைநீர் தேங்கி சேரும் சகதியுமாக உள்ளது. மழையின் காரணமாக அனைத்து பணிகளும் முற்றிலும் முடங்கியுள்ளது.

அரவக்குறிச்சி-நச்சலூர்

அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, ஆண்டிபட்டிக்கோட்டை, ஈசநத்தம், மலைக்கோவிலூர், தடாகோவில் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் மதியம் வரை இடைவிடாது மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் பொதுமக்கள் பலரும் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிற்குள்ளேயே முடங்கினர்.நச்சலூர், நங்கவரம், இனுங்கூர், பொய்யாமணி, நெய்தலூர் காலனி, நெய்தலூர், சேப்ளாப்பட்டி, முதலைப்பட்டி ஆகிய பகுதிகளில் விடியற்காலை முதல் இரவு வரை தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதனால் நெற்பயிர் சாகுபடி செய்த வயல்களில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் பல மணி நேரம் தண்ணீரில் வடியாமல் இருந்தது. மேலும் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையின் காரணமாக பொதுமக்கள் மற்றும் விவசாய கூலி தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தனர்.

இதேபோல் க.பரமத்தி, வேலாயுதம்பாளையம், தரகம்பட்டி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதல் பரலாக மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story